ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆன்மா இல்லாத சவம் போன்றது என்று கூறியிருக்கும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மொழி பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
டில்லி லோதி எஸ்டேட்டில் தமிழ் கல்விக் கழகம் அமைந்திருக்கிறது. இங்குள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஐந்தரை அடி உயரம், 1,500 கிலோ எடையில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் வழங்கி இருக்கும் இந்த திருவள்ளுவர் சிலையை, தமிழக கவர்னர் ரவி இன்று திறந்து வைத்தார். விழாவில் பேசிய கவர்னர் ரவி, “திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டதாகக் கருதுகிறேன். ஆனால், திருக்குறள் என்பது அதற்கும் மேலானது. திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது.
தமிழக கவர்னராக நான் பதவியேற்ற பின்னர் எனக்குத் திருக்குறள் புத்தகம் அதிக அளவில் பரிசாகக் கிடைத்தது. இதில் பெரும்பாலானவை ஜி.யு. போப் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு. திருவள்ளுவர் உள் ஒளி மிக்க ஆன்மிகவாதி. அவரது திருக்குறளின் முதல் குறளே ஆதிபகவன் பற்றி எழுதியிருக்கிறார். இந்த உலத்தை ஆதிபகவன்தான் படைத்தார். அதைத்தான் திருவள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், திருக்குறளை மொழி பெயர்த்த ஜி.யு. போப், அதிலுள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவிற்கு வந்த ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டிருக்கிறது. மொழி பெயர்ப்புகளில் ஆதிபகவன் என்பதையே தவிர்த்திருக்கிறார்” என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.