டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது என்று தெரியாமலேயே, தமிழக மாணவர்களை ஏ.பி.வி.பி. அமைப்பினர் தாக்கியதாக பதிவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஏ.பி.வி.பி. அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.
சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ம் தேதி மாலை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி 7.30 மணியளவில் முடிவடைந்த நிலையில், சிறிது ஓய்வுக்காக அருகிலுள்ள கேன்டீனுக்கு மாணவர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போது, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி, பிரதாப் ராணா ஆகியோரின் போட்டோக்களை எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும், வெளியிலிருந்து அழைத்துவரப்பட்ட லதா என்பவர் உட்பட இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்களும் உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதையறிந்து வந்த ஏ.பி.வி.பி. மாணவர்கள் தட்டிக் கேட்டதற்கு, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். இதனால், ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் காயமடைந்தனர்.
நிலைமை இப்படி இருக்க, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது தெரியாமலேயே, தமிழக மாணவர் ஏ.பி.வி.பி. அமைப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறி தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின். இதுதான் ஏ.பி.வி.பி. அமைப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பல்கலை.யில் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே ஏ.பி.வி.பி. அமைப்பினர் மீது குற்றம்சுமத்திய ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து அந்த அமைப்பின் மத்திய செயலாக்கக் குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் கூறுகையில், “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெளியாட்களை அழைத்து வந்து, சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோரின் போட்டோக்களை உடைத்து சேதப்படுத்தினர்.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலினோ, ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள், தமிழக மாணவர்களை தாக்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது இன, மொழி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்துகிறது. பல்கலைக்கழகத்தில் நடந்ததை ஆராயாமல் ஸ்டாலின் பதிவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. ஆகவே, ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டது குறித்து முதல்வர் விளக்கம் அலிக்க வேண்டும். மேலும், மன்னிப்புக் கேட்டு தனது பதிவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது சட்ட ரீதியாக அவதூறு வழக்கு பதிவு செய்வோம். அதேபோல, தமிழகத்தில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. அதோடு, பெண் காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இவற்றை தீர்ப்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.