90’s கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பாடகர் கே.கே. திடீர் மரணம்!

90’s கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பாடகர் கே.கே. திடீர் மரணம்!

Share it if you like it

காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்து வந்த கே.கே. என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். 55 வயதாகும் இவர், டெல்லியில் வசித்து வந்தார். மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் எனப்படும் விளம்பர பாடல்களை பாடியிருக்கிறார். கே.கே.வை திரையுலகில் அறிமுகப்படுத்தியது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். காதல் தேசம் திரைப்படத்தில் “கல்லூரிச் சாலை” மற்றும் “ஹலோ டாக்டர்” பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார். இதுதான் கே.கே. திரையில் பாடிய முதல் பாடல்களாக கருதப்படுகிறது. பின்னர், தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

90’S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பாடகர்தான் இந்த கிருஷ்ணகுமார் குன்னத். 1990-களில் வெளியான மின்சாரக் கனவு திரைப்படத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’, காக்க காக்க திரைப்படத்தில் ‘உயிரின் உயிரே’, 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’, செல்லமே திரைப்படத்தில் ‘காதலிக்கும் ஆசையில்லை’, காவலன் திரைப்படத்தில் ‘பட்டாம்பூச்சி கூப்பிடும் போது’, மன்மதன் திரைப்படத்தில் ‘காதல் வளர்த்தேன்’ உள்ளிட்ட பல்வேறு காதல் பாடல்களுக்கு இவரது குரல்தான் உயிர் கொடுத்தது. மெல்லிசை காதல் பாடல் மட்டுமின்றி, ரெட் படத்தில் ‘ஒல்லிக்குச்சி உடம்புகாரி’, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் ‘வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல’, அந்நியன் திரைப்படத்தில் ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’, கில்லி படத்தில் ‘அப்படிப்போடு போடு’ என்பன போன்ற அதிரடியான காதல் பாடல்களையும் பாடியிருக்கிறார். மேலும், 1999-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காகவும் கே.கே. பாடல் பாடியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாசார விழாவில் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற கே.கே. நிகழ்ச்சி முடிந்ததும், தனது அறைக்கு சென்றிருக்கிறார். அங்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டார். பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலித்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், என் “உயிரின் உயிரே” மறைந்தது. லெஜண்ட் படத்தில் கடைசியாக அவர் பாடிய பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, இப்படியொரு அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “இளைப்பாருங்கள் நண்பரே. இது பயங்கரமான இழப்பு. கே.கே.யின் மாயாஜாலக் குரலும் இசையும் என்றென்றும் நம்மிடையே எதிரொலிக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதே போன்று பல்வேறு தலைவர்களும், திரை பிரபலங்களும் பாடகர் கே. கே.வின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வாலா, எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சோகம் மறைவதற்குள் இசைத்துறையில் மற்றொரு இழப்பு ஏற்பட்டிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


Share it if you like it