மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வரும் நிலையில், பதில் சொல்ல முடியாமல் கெஜ்ரிவால் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.
டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தார். இதில், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், 100 கோடி ரூபாய் அளவுக்கு கைமாறியதாகவும் குற்றச்சாட்டுக் கிளம்பியது. இவ்விவகாரம் பெரியளவில் வெடித்த நிலையில், புதிய மதுபானக் கொள்கையைத் திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்தது. ஆனாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதையடுத்து, மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. அந்த வகையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதோடு, மதுபான கொள்கை விவகாரத்தில் கிடைத்த 100 கோடி ரூபாயை கோவா தேர்தலுக்குப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுக் கிளம்பியது. இதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆஜராகும்படி சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால் பா.ஜ.க. உத்தரவிட்டால் சி.பி.ஐ. தன்னை கைது செய்யும் என்று கூறினார். பின்னர், சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி கட்சியினர் காஷ்மீரி கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலிடம், சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருவதாகவும், பதில் சொல்ல முடியாமல் அவர் திணறி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.