டெல்லியில் தேசியக்கொடியை வைத்து ஒருவர் தனது டூவீலரை துடைக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரத தேசத்தின் 75-வது சுதந்திர தின விழா, கடந்த மாதம் 15-ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 75-வது சுதந்திர தினம் என்பதால், அமுதப் பெருவிழாவாக கொண்டாடும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், இதையொட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வகையில், நாட்டிலுள்ள தேசபக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் வீடுகளில் கொடியேற்ற வசதியாக வெறும் 25 ரூபாய்க்கு தபால் நிலையங்கள் மூலம் மத்திய அரசு தேசியக்கொடியை விற்பனை செய்தது. அந்த வகையில், 30 கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான், டெல்லியில் தேசியக்கொடியை வைத்து ஒருவர் தனது டூவீலரை துடைத்து அவமரியாதை செய்திருக்கிறார். டெல்லியிலுள்ள பஜன்புரா பகுதியில் வசிக்கும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது இரு சக்கர வாகனத்தை தேசியக்கொடியை வைத்து துடைத்து சுத்தம் செய்திருக்கிறார். இதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, மேற்கண்ட நபர் பஜன்புரா பகுதியில் வசிப்பவர் என்பதைத் தெரிந்துகொண்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர் தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும், தவறுதலாக நடந்துவிட்டது எனவும் கூறியிருக்கிறார். எனினும், போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசியக்கொடியை அவமதித்தற்காக அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.