அமித்ஷா வீட்டை சுற்றிச்சுற்றி வந்த மர்ம நபர் கைது!

அமித்ஷா வீட்டை சுற்றிச்சுற்றி வந்த மர்ம நபர் கைது!

Share it if you like it

மும்பையில் அமித்ஷா வீட்டைச் சுற்றிச்சுற்றி வந்த மர்ம நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மும்பையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பதற்காகவும், அரசியல் நிகழ்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக கடந்த 4-ம் தேதி சென்றிருந்தார். அரசு இல்லத்தில் இரவு தங்கிய அவர், மறுநாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோருடன் சென்று மும்பையில் பிரபலமான லால்பாக் ராஜா கணபதியை தரிசனம் செய்தார். பின்னர், மூவரும் அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.

அமித்ஷா அரசு இல்லத்தில் தங்கியிருந்தபோது, அவரது இல்லத்தை மர்ம நபர் ஒருவர் சுற்றிச்சுற்றி வந்தார். அந்த நபர் உள்துறை அமைச்சக பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுவது போல ஒரு ரிப்பன் கட்டியிருந்தார். இதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அமித்ஷா தங்கியிருந்த பங்களா மட்டுமல்லாது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரது வீடுகளுக்கு வெளியிலும் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த சிலர், அவரை பிடித்து விசாரித்தபோது, தான் உள்துறை அமைச்சக அதிகாரி என்று கூறிவிட்டு எஸ்கேப்பாகி விட்டார்.

எனவே, இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மும்பை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். மும்பை போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரித்தபோது, அவரது பெயர் ஹேமந்த் பவார் என்பதும், மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி. ஒருவரின் பி.ஏ. என்று தெரிவித்த அவரிடமிருந்து, போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர். பின்னர், ஹேமந்த் பவாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றனர். முதல்கட்ட விசாரணையில், தனக்கு பெரிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ள இதுபோல பவார் நடந்து கொண்டது தெரியவந்திருக்கிறது.


Share it if you like it