குதுப் மினார் இருப்பது ஹிந்து கோயில்: ஆராய்ச்சியாளர் கே.கே.முகமது பகீர் தகவல்!

குதுப் மினார் இருப்பது ஹிந்து கோயில்: ஆராய்ச்சியாளர் கே.கே.முகமது பகீர் தகவல்!

Share it if you like it

27 ஹிந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதுதான் குதுப் மினார் என்கிற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் புகழ்பெற்ற இஸ்லாமிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கே.கே.முகமது.

இந்தியாவில் தற்போது இருக்கும் பழமையான மசூதிகளில் பெரும்பலானவை ஹிந்து கோயில்கள் என்று கூறப்பட்டு வருகிறது. அதாவது, பாரதத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான ஹிந்து கோயில்கள் இருந்ததாகவும், அவற்றை மொகலாய மன்னர்கள் இடித்து விட்டு மசூதிகளாக கட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், பாபர் மசூதி, தாஜ்மகால், குதுப் மினார் உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளங்கள் எல்லாம் ஹிந்து கோயில்களாக இருந்தவை என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் ராமர் கோயில் இருந்த இடம். அதை இடித்து விட்டு மசூதியை கட்டியிருப்பது சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு தற்போது அங்கு ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான் குதுப் மினாரும் ஹிந்து கோயில்களை இடித்து விட்டு கட்டப்பட்டதுதான் என்று கூறியிருக்கிறார் இஸ்லாமிய ஆராய்ச்சியாளர். புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளராக விளங்குபவர் கே.கே.முகமது. அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததற்கான அடையாளம் இருப்பதாகக் கூறிய குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் டெல்லியில் இருக்கும் குதுப் மினார் அருகே குவாத்-உல்-இஸ்லாம் மசூதி கட்டுவதற்காக 27 ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “குதுப்மினார் அருகே விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு கோயில் இருந்ததை இது நிரூபிக்கிறது. 73 மீட்டர் உயரமுள்ள குதுப்மினார் 27 ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்களில் இருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தித்தான் கட்டப்பட்டிருப்பதாக டெல்லி சுற்றுலா இணையதளம் தெளிவாக குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. டெல்லியின் முதல் முஸ்லீம் ஆட்சியாளர் குதுப்-உத்-தின் ஐபக், டெல்லியின் கடைசி ஹிந்து ஆட்சியாளரான பிரிதிவிராஜ் சவுகானை தோற்கடித்ததாகவும் அந்த இணையதளம் கூறுகிறது. இதன் பிறகு, அங்கிருந்த 27 ஹிந்துக் கோயில்களை இடித்து விட்டது. அதிலிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு குதுப் மினார் கட்டப்பட்டதாக அதன் கிழக்கு வாயிலின் மேல் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. இருப்பினும், இது ஒரு தூய இஸ்லாமியக் கட்டமைப்பு.

கஜினி, கௌரி மற்றும் பிற முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் இதே போன்ற மினார்கள் உருவாக்கப்பட்டன. இடைக்காலத்தில் பல தவறுகள் நடந்துள்ளன. தற்போதைய நிலை கட்டமைப்புகளுக்கு இரு சமூகங்களுக்கும் பொறுப்பு உள்ளது. கம்யூனிஸ்ட்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, உண்மையை மறைக்க முயல்வதுதான். கோயில்கள் இடிக்கப்பட்டது உண்மைதான், உண்மையை மறைப்பதால் எந்தப் பலனும் இல்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதைத் தடுக்க முஸ்லிம்களைத் தூண்டிவிட்டது கம்யூனிஸ்ட்கள்தான். 27 ஹிந்து கோயில்களின் எச்சங்களால் குதுப் மினார் அருகிலுள்ள முஸ்லீம் மசூதி கட்டப்பட்டிருப்பதால்தான் அது ஹிந்து அலங்காரத்தைக் கொண்டிருக்கிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை. கி.பி. 1200-ல் ஐபக் என்பவரால் குதுப்மினார் கட்டுமானம் தொடங்கப்பட்டது. ஆனால், அவரால் அடித்தளத்தை மட்டுமே முடிக்க முடிந்தது. அவரது வாரிசான இல்டுட்முஷ் கட்டுமானத்திற்கு மேலும் மாடிகளைச் சேர்த்தார். பின்னர், 1368-ல் ஃபிரோஸ் ஷா துக்ளக் கட்டடத்தின் கடைசி மாடியைக் கட்டினார். டெல்லியில் தற்போது குதுப் மினார் இருக்கும் இடம் பிருத்விராஜ் சௌஹான் உட்பட சுஹான்களின் தலைநகரமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, என்.எம்.ஏ. எனப்படும் கலைப் பொக்கிஷங்களை பராமரிக்கும் தேசிய பராமரிப்பு அமைப்பு குதுப் மினார் அருகே இருக்கும் 2 விநாயகர் சிலைகளை அகற்றி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு தடை விதித்த டெல்லி நீதிமன்றம், சிலைகளை அகற்றக் கூடாது என்று ஏ.எஸ்.ஐ.க்கு உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வளாகத்தில் உள்ள பழமையான கோயில்களை புனரமைத்து, ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) கோரிக்கை விடுத்திருக்கிறது.


Share it if you like it