அமைச்சரும், இளைஞரணித் தலைவருமான உதயநிதிக்கு எதிராக அக்கட்சியின் எம்.பி. ஒருவர் சீறியிருப்பது உ.பி.ஸ்கள் மத்தியில் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வில் பல்வேறு அணிகள் இருந்தாலும் மிகவும் முக்கியமானது இளைஞரணிதான். இதனால்தான், கட்சியின் பொருளாளர் என்கிற முக்கிய பதவியை கைப்பற்றும் வரை இளைஞரணித் தலைவர் பதவியை விடாமல் தன் வசம் வைத்திருந்தார் ஸ்டாலின். இதன் பிறகு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்பதவி வெள்ளக்கோவில் சாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அப்பதவியில் அவர் வெறும் 6 மாதங்களே நீடித்தார். இதனிடையே, உதயநிதி அரசியலில் காலடி எடுத்து வைத்ததால், அம்மாத இறுதியிலேயே அப்பதவி உதயநிதிக்கு வழங்கப்பட்டது.
இளைஞரணி செயலாளராக உதயநிதி பதவியேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், புதிய இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். இந்த பட்டியலை எதிர்த்துத்தான் அக்கட்சியின் தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் குரல் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர் அணியை பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதியாக நம்புபவன். தர்மபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போல் நடந்துவிடக் கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த பதிவுதான் உ.பி.ஸ்களை உஷ்ணப்படுத்தி இருக்கிறது. அடுத்தாண்டு பார்லிமென்ட் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தி.மு.க.வில் மீண்டும் செந்தில்குமாருக்கு சீட் கிடைக்காது என்பது கட்சி நிர்வாகிகளுக்கு நன்கு தெரியும். இது எம்.பி. செந்தில்குமாருக்கும் தெரியும். இதனால், சமீபகாலமாக கட்சித் தலைமைக்கு எதிராக அவ்வப்போது தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தனது ஆதங்கத்தை உதயநிதி மீது காட்டி இருக்கிறார் என்று ஆவேசத்தோடு கூறிவருகிறார்கள்.