விதவை பெண்ணுக்கு அல்வா… தி.மு.க. பிரமுகர் ஜல்சா!

விதவை பெண்ணுக்கு அல்வா… தி.மு.க. பிரமுகர் ஜல்சா!

Share it if you like it

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 4.50 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததோடு, குழந்தையையும் கொடுத்து விட்டு, கம்பி நீட்டிய தி.மு.க. பிரமுகர் மீது, போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், கையில் குழந்தையோடு தவித்து வருகிறார் விதவைப் பெண் ஒருவர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சிவன்யா. இத்தம்பதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஆண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு ஜெயக்குமார் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தார். இதன் பிறகு, ஜெயக்குமாரின் நண்பரான பட்டுக்கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பாபுவுடன், சிவன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாபு ஏற்கெனவே 2 திருமணம் செய்தவர் என்பதை மறைத்து சிவன்யாவுடன் நெருக்கமாக பழகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில், சிவன்யாவிற்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய பாபு, அவரிடமிருந்து 4.60 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி இருக்கிறார். இதனிடையே, சிவன்யா கருத்தரிக்கவே, கருவை கலைக்கச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார் பாபு. ஆனால், சிவன்யா சம்மதிக்காமல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இப்படிப்பட்ட நிலையில்தான், பாபு ஏற்கெனவே 2 பெண்களை திருமணம் செய்திருப்பதும், 4 குழந்தைகள் இருப்பதும் சிவன்யாவுக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, தன்னிடம் வாங்கிய 4.60 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார் சிவன்யா.

இந்த விவகாரம் பாபுவின் 2 மனைவிகளுக்கும் தெரியவந்ததை அடுத்து, ஊர் பஞ்சாயத்து மூலமாக பேசி 1.50 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறார் பாபு. மேலும், கடைசிவரை சிவன்யா மற்றும் குழந்தைகளை வைத்து பாதுகாத்துக் கொள்வதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒப்புக்கொண்டபடி பாபு நடந்து கொள்ளாததால், தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் சிவன்யா புகார் செய்தார். அதில், தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமலும், தன்னை ஏமாற்றி பழகி பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்யவும், கருவிலேயே கலைக்கவும் முயற்சி செய்து, தன்னை ஏமாற்றிய பாபு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து, தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின்போது, பாபு அனைத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். எனினும், பாபு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால், செய்வதறியாது திகைத்து நிற்கும் சிவன்யா, கண்ணீர் மல்க மீடியாக்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it