ஹிந்து மாணவ, மாணவிகள் விபூதி, பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கஸ்தூரி ரெட்டியார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் நிர்மலா. இவர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நெற்றியில் விபூதி வைக்கக் கூடாது, பொட்டு வைக்கக் கூடாது என்று கடந்த 3 மாதங்களாக கூறி வந்திருக்கிறார் நிர்மலா. அவ்வாறு விபூதி, பொட்டு வைத்து வந்த மாணவ, மாணவிகளுக்கு தண்டனையும் வழங்கி இருக்கிறார். தலைமை ஆசிரியையின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கவே, இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு படையெடுத்த ஹிந்து பெற்றோர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர், தலைமை ஆசிரியையை முற்றுகையிட்டு ஏன் விபூதி, பொட்டு வைக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இதற்கு தலைமை ஆசிரியை நிர்மலாவோ, அரசு ஆணை இருப்பதாகவும், அதை நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், உண்மையில் அப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. எனினும், விடாத பெற்றோர் பிற மதத்தவர்கள் எப்படி வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு தலைமை ஆசிரியை உரிய பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில், தலைமை ஆசிரியை அறையில் எடுத்த வீடியோவை ஹிந்து அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில், முஸ்லீம் மாணவிகள் பர்தா, ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கும் அரசும், பள்ளி நிர்வாககங்களும், ஹிந்து மாணவ, மாணவிகள் விபூதி, பொட்டு வைக்க ஏன் அனுமதி மறுக்கிறார்கள். ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம், பிற மதத்தவர்களுக்கு ஒரு சட்டமா என்று கேள்விகளை எழுப்பி கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்தனர். மேலும், பர்தா, ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து இடமாற்றம் செய்தது போல, இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அதிகாரி நசுருதீன், தாசில்தார் முத்துச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கஸ்தூரி ரெட்டியார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்தனர். பின்னர், இது தொடர்பாக தலைமை ஆசிரியை நிர்மலாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, தான் அப்படி கூறவில்லை என்றும், கலர் கலராக சாந்து பொட்டு அணிந்து வரக்கூடாது என்றுதான் கூறியதாகவும் தெரிவித்தார். அதேபோல, மாணவர்களை அடிக்கக் கூடாது என்று அரசு உத்தரவு இருக்கும் நிலையில், எப்படி மாணவர்களை அடிக்கலாம் என்று கல்வி அதிகாரி கேள்வி எழுப்பவே, முதலில் அடிக்கவே இல்லை என்றவர், பின்னர், ஹோம் வொர்க் செய்வதில்லை. ஆகவே, கன்ட்ரோலில் வைப்பதற்காக அடித்தேன் என்று கூறினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.