நிலத்தை எழுதித் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று தி.மு.க. நிர்வாகி மிரட்டியதால், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து விவசாயி குடும்பம் கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடக்குப்பட்டி அருகேயுள்ள ஏ.கோம்பையைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. கல் உடைக்கும் தொழிலாளரியான இவருக்குச் சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலம், அப்பகுதியில் இருக்கிறது. இந்த நிலத்தை தி.மு.க.வைச் சேர்ந்த அய்யலூர் பேரூராட்சித் தலைவர் கருப்பன், இலவசமாக எழுதிக் கொடுக்கும்படி அடியாட்களை மிரட்டி இருக்கிறார். இதற்கு மறுத்துவிட்ட திருமூர்த்தி குடும்பத்தினரை, கிராமத்தை விட்டே விரட்டி அடித்து விட்டாராம். இதனால் கடந்த 15 நாட்களாக வீட்டுக்குச் செல்ல முடியாமல் திருமூர்த்தியின் குடும்பம் தவித்து வருகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட திருமூர்த்தி, தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுத்திருக்கிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் நில அபகரிப்பில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதனால், அடுத்து நடந்த 2011, 2016 ஆகிய 2 தேர்தல்களிலும் தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், தற்போது தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீண்டும் தி.மு.க. நிர்வாகிகள் நில அபகரிப்பில் ஈடுபட்ட வருகின்றனர். ஏற்கெனவே, சேலத்தில் விவசாயின் நிலத்தை தி.மு.க. பிரமுகர் அபகரிக்க முயன்றதால், விவசாயி ஒருவர் கோவணத்துடன் கலெக்டர் அலுவலகத்குக்கு மனு கொடுத்தார். அதேபோல, விழுப்புரத்தில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் நிலத்தை எழுதிக் கேட்டு மூதாட்டியை தாக்கிய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.