திண்டுக்கல்லில் செல்ஃபி மோகத்தில் மற்றொரு இளைஞர் பலியான சம்பவம் அரங்கேறி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதுமே செல்ஃபி மோகம் பாடாய்படுத்தி வருகிறது. இதற்கு, சிறுவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் அடக்கம். ஆபத்தான இடங்களில் இருந்து செல்ஃபி எடுக்க முயலும் பலரும், விபத்தில் சிக்கி உயிரை இழந்த ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. ஒரு இளைஞர் பின்னால் வரும் ரயிலுக்கு முன்பு நின்று செல்ஃபி எடுக்க முயன்று உயிரை இழந்தார். அதேபோல, குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பெரியவர் ஒருவர், கடற்கரை ஓரம் நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது, பெரிய அலை அடித்ததில் மகனுடன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இருவருமே உயிரிழந்தனர். இதுபோன்று பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படி இருந்தும், யாரும் திருந்தியபாடில்லை.
இந்த நிலையிதான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரு அருவி அருகே நின்று செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர், பரிதாபமாக உயிரை இழந்திருக்கிறார். அதாவது, தமிழகம் முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மழைப் பிரதேசங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பல அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இருக்கும் நீரோடைகள், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் விவசாயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில், பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் என்கிற இளைஞர், கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு மலைக் கிராமப் பகுதியில், விவசாயம் செய்து வருகிறார். இந்த சூழலில், அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால், தனது நண்பர்களுடன் சேர்ந்து பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி அருவிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் போட்டோ எடுத்திருக்கிறார். அதன்படி, புல்லாவெளி அருவியில் உள்ள பாறைச் சரிவுகளிலும் ஆபத்தான முறையில் நின்று போட்டோ எடுத்திருக்கிறார் அஜய் பாண்டியன்.
அப்படி ஒரு பாறைச் சரிவில் நின்று போட்டோ எடுத்தபோது அஜய் பாண்டியன் எதிர்பாராத விதமாக கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், கூச்சலிட்டனர். மேலும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அஜய் பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதோடு, அருவியில் நீர்வரத்து அதிகளவில் விழுவதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான், அருவியின் பாறைச் சரிவில் நின்று அஜய் பாண்டியன் போட்டோம் எடுத்துக் கொள்வதும், அப்போது தவறி விழுந்த காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து பலரும் பதைபதைத்துப் போகிறார்கள். சாகசம் என்றும் ஆபத்தில்தான் முடியும் என்பது இளைஞர்களும், சுற்றுலாப் பயணிகளும் உணர வேண்டும்.