திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள், கௌரவர்கள் யார்? ராம் கோபால் வர்மா திமிர் பதிவு!

திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள், கௌரவர்கள் யார்? ராம் கோபால் வர்மா திமிர் பதிவு!

Share it if you like it

பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரௌபதி முர்மு குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்ட பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

சர்ச்சைக்குரிய இயக்குனராக அறியப்படுபவர் ராம் கோபால் வர்மா. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இதன் மூலம் புகழ்பெற்ற ராம் கோபால் வர்மா, திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவிடும் கருத்துக்களும் சர்ச்சைக்குள்ளானவைதான். இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரௌபதி முர்மு குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

இது குறித்து ராம் கோபால் வர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் “திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால், பாண்டவர்கள் யார்? முக்கியமாக, கௌரவர்கள் யார்?” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் கூடூர் நாராயணா ரெட்டி, ராம் கோபால் வர்மா மீது போலீஸில் புகார் அளித்ததோடு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு கோரியிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ராம் கோபால் வர்மாவின் இந்த ட்வீட் பட்டியலின மக்களை அவமரியாதை செய்வதாக உள்ளது. திரௌபதியை பாண்டவர்கள், கௌரவர்களுடன் ஒப்பிட்டு பதிவிட்டிருப்பதால் பா.ஜ.க.வினராகிய நாங்கள் வேதனை அடைந்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் பதறிப்போன ராம் கோபால் வர்மா, உடனடியாக தனது கருத்துக்கு விளக்கம் அளித்து மற்றொரு ட்வீட் செய்தார். அதில், “இது வெறும் கிண்டலுக்காக சொல்லப்பட்டதே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. மகாபாரத கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் திரௌபதிதான். மிகவும் அரிதாக தென்பட்ட இந்த பெயர், அந்த கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் தோன்றியதால், அவ்வாறு வெளிப்படுத்தினேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, ராம் கோபால் வர்மாவின் பதிவு குறித்து கருத்துத் தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. டி.ராஜா சிங், “வர்மா எப்போதுமே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சொல்லி செய்திகளில் பிரபலமாக இருக்க முயற்சிக்கிறார்” என்று கூறியிருக்கிறார். மேலும், பா.ஜ.க. தரப்பில் இருந்து ராம் கோபால் வர்மாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆகவே, தன்னுடைய இன்னொரு பதிவில், “இந்த நம்ப முடியாத ஐகானின் பிரம்மாண்டம், மிகவும் மரியாதைக்குரிய திரௌபதி குடியரசுத் தலைவராக இருப்பதால், பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் போரை மறந்து, ஒன்றாக அவரை வணங்குவார்கள். பின்னர், மகாபாரதம் புதிய இந்தியாவிலும், பா.ஜ.க.விலும் மீண்டும் எழுதப்படும்” என்றும், மற்றொரு பதிவில், “கெளரவமான திரௌபதி ஜியைப் பற்றி நான் செய்த விரிவான ஆராய்ச்சி மற்றும் அவரது கண்களின் தீவிரம் மற்றும் அவரது புன்னகை மற்றும் முகத்தின் ஆழம் ஆகியவற்றின் நுணுக்கங்களைப் படித்த பிறகு, அவர் உலகம் முழுவதும் எப்போதும் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நன்றி பா.ஜ.க.” என்றும் நக்கலாக பதிவிட்டிருக்கிறார்..


Share it if you like it