முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவரின் நிலதானக் கல்வெட்டு கண்டுபிடிப்பு !

முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவரின் நிலதானக் கல்வெட்டு கண்டுபிடிப்பு !

Share it if you like it

சிவகங்கையில் 1800ஆம் ஆண்டைச் சேர்ந்த நிலதானக் கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இக்கல்வெட்டை விரைவில் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவகங்கையில் சிவன் கோயிலுக்குப் பின்னால் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், ஓவியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர், அவ்விடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், 224 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொல்லங்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார் கொடுத்த தகவலின் படி, சிவன் கோயில் பின்னால் உள்ள பழச்சாறு கடைக்கு அருகில் ஆய்வு மேற்கொண்டோம். அக்கல்லை அங்கு கடை நடத்தி வரும் பரமசிவத்தின் அனுமதியோடு நகர்த்தி வாசித்துப் பார்த்ததில், அது 1800வது ஆண்டு கல்வெட்டு என்றும், 224 ஆண்டுகள் பழமையானது என்பதும் தெரிய வந்தது.

இந்த கல்வெட்டானது 1729-இல் தொடங்கிய சிவகங்கை மன்னராட்சியின் ஐந்தாவது மன்னரான வேங்கன் பெரிய உடையாத் தேவர் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் கொடுத்த நிலதானக் கல்வெட்டு என்பதைக் கண்டறிந்தோம். இதில் சாலிவாகன சகாப்தம், கலியுக சகாப்தம் குறிக்கப் பெற்றதோடு, ரௌத்திரி வருடம் ஆடி மாதம் 26ஆம் தேதி சுக்கிரபூரம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வழங்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு ஸ்ரீராமஜெயம் என்று தொடங்குகிறது, கல்வெட்டில் மூன்று பக்கங்களில் எழுத்துக்கள் உள்ளன. முதல் பக்கத்தில் 35 வரிகளும், மற்றொரு பக்கத்தில் 35 வரிகளும், இதற்கு இடைப்பட்ட குறுகலான பக்கத்தில் 15 வரிகளும் இடம்பெற்றுள்ளன. 35 வரிகள் இடம்பெற்றுள்ள இரண்டு பகுதிகளில் சிவகங்கை மன்னர் வீரப்பட்டனுக்கு நிலதானம் கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது. குறுகலான 15 வரிகளில் இதை எழுதியவர் விஸ்வாமிதாசன் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

தொடர்ந்து பேசிய புலவர் கா.காளிராசா, “செப்பு பட்டயங்களில் இடம்பெறும் நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், பாசி, படுகை போன்ற சொற்கள் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் பல இடங்களில் கிரந்த எழுத்துடைய சமஸ்கிருத சொற்கள் விரவியதாகவும் ஓரிடத்தில் தெலுங்குச் சொல்லும் இடம்பெற்றுள்ளது‌.

குறுகலான பக்கத்தில் இந்தச் சாசனத்தை எழுதியவன் உபய சம்பந்த நம் கோத்திரத்தைச் சார்ந்த திருவேங்கடம் ஆசாரியான் குமரன் விஸ்வாமிதாசன் என்று கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துகள் இடம்பெற்றுள்ள வரிகள் தொல்லியல் துறை அலுவலர்களிடம் மேலாய்வு செய்யப்பட்டன, இக்கல்வெட்டு விரைவில் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *