ஏன் இந்த அதிகார சண்டை?
நமது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க, எல்லா உடல் உறுப்புகளும் நல்ல முறையில் இயங்க வேண்டும். இதயம் துடித்தால் மட்டும் போதாது, ரத்தம் சீராக ஓட வேண்டும். அதுபோல், சுவாசம், உடல் செரிமானம், கை, கால் என எல்லா உடல் உறுப்புகளும் நல்ல முறையில் இயங்கினால் தான், உயிரும் உடலும் நல்லபடியாக இருக்கும். இதில், ஏதேனும் ஒரு உறுப்பிற்கு, சிறிய பாதிப்பு நேர்ந்தாலும், மொத்த உடலும், பாதிக்கப் பட்டு, நடமாட முடியாமல் படுக்க நேரிடும்.
நமது நாட்டில் உள்ள அரசு நிர்வாகமும், உடல் உறுப்புகள் போலத் தான். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இருந்தாலும், படித்து பட்டம் பெற்று, ஒரு பதவியில் அமர்ந்து இருக்கும் அலுவலர்களாலும், அரசு நிர்வாகம் நல்ல வகையில் இயங்கி வருகின்றது.
நமது நாட்டிற்கு பிரதமர், ஜனாதிபதி என ஒருவர் மட்டுமே இருப்பார்கள். ஒரு மாநிலத்திற்கு என ஒரு முதல் அமைச்சர் மட்டுமே இருப்பார். அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இணைந்து செயல் புரிவார்கள். நிர்வாக வசதிக்காக, இவர்களுடன் அதிகாரிகளும் இருப்பார்கள்.
மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்கள் (District Collector) :
மாவட்ட வருவாய்த் துறையின் உயர்ந்தப் பொறுப்பில் இருப்பவர், மாவட்ட ஆட்சியர் அவர்கள். மாவட்டத்தின் வருவாயை வசூலிப்பது, அதனை சரியாக நிர்வகிப்பது என அவருக்கே உண்டான வேலைகள் இருக்கும்.
மாவட்ட நீதிபதி (District Judge) :
அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதில், காவல் துறையினருடன் இணைந்து, மாவட்ட நீதிபதி செயல் படுவார்கள்.
வட்டாட்சியர் பணிகள் (Tahsildhar) :
தனது ஆளுகைக்கு உட்பட்ட எல்லா விதமான அரசு மற்றும் அரசை சேராத அமைப்புகளின் பணிகளை கவனித்து, அவற்றின் மீது ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அவற்றை கட்டுப் படுத்தும் பணிகளை மேற்கொள்வார்.
வருவாய் நிர்வாகம் (Revenue) :
தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில், நிர்வாகத்தை செம்மையாக நடத்த, முக்கிய பங்கு வைப்பார்கள். நிர்வாக வசதிக்காக, வருவாய் கோட்டங்கள் வட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த, திட்டமிட்டு உள்ள பணிகளையும், அந்தத் திட்டங்களையும் மக்களிடையே கொண்டு செல்வதில், வருவாய்த்துறை முக்கிய பங்கு வகிக்கும்.
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு, நிவாரணம் வழங்குவதுடன், அவர்களுக்கு மீண்டும் வாழ்வு அளிக்கும் வகையில், தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். அரசு நிலங்களை முறையாக பாதுகாத்து, அந்த இடத்தை சேர்ந்த பத்திரங்களை முறையாக பராமரிக்கவும் செய்யும்.
ஆளுநர் பணிகள் (Governor) :
இந்திய அரசியல் சாசனம் சட்ட விதிகளின் படி, மாநிலத்திற்கு ஆளுநர் என ஓருவர் இருக்க வேண்டும். அவர் இருக்கும் இடத்திற்கு, எந்தவித வாடகையும் அவர் கொடுக்கத் தேவை இல்லை.
மரண தண்டனையை முழுமையாக நீக்கும் அதிகாரம், ஆளுநருக்கு இல்லை. அப்படி ஒரு அதிகாரம், குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. எனினும், மரண தண்டனையை குறைக்கவோ அல்லது தள்ளிப் போடவோ, ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது.
மாநிலத் தேர்தல் முடிந்து, தேர்வு முடிவுகள் வந்த பின்னர், பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியையும், அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவரையும் ஆட்சி அமைக்க, ஆளுநர் அழைப்பு விடுப்பார். அந்த அழைப்பை ஏற்று, அந்தக் கட்சி தங்களது பெரும்பான்மையை நிரூபித்தால், ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
ஆளுநர் முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த பின்னர், முதல்வரின் ஆலோசனைப் படி, அமைச்சர்களை நியமித்து, அவர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து, அவர்களுக்கான துறையை ஒதுக்குவார். ஏறக்குறைய மத்தியில், குடியரசுத் தலைவர் – பிரதமருக்கும் இடையிலான உறவு எப்படி இருக்குமோ, அது போலவே ஆளுநருக்கும் – முதல்வருக்குமான உறவும் இருக்கும்.
துணை நிலை ஆளுநர்கள் (Lieutenant Governor) :
புதுடெல்லி, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் போன்ற யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்கள் செயல் படுவார்கள்.
சட்டம் இயற்றும் அதிகாரம் (Legislative Powers) :
மாநிலங்களில், ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் எனில், அந்த மாநில சட்டமன்றப் பேரவை கூட்டப்பட்டு, அதில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவையில் அந்த மசோதா நிறைவேற்றப் பட்ட பின்னர், பிறகு ஆளுநர் கையெழுத்திடுவார். அப்போது தான், அது சட்டமாகும். அது போலவே தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்றால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கீழ் அவையிலும், மேல் அவையிலும் அந்த மசோதா நிறைவேற்றப் பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் கையெழுத்து இடுவார். பிறகு தான், அது சட்டமாக முழு வடிவம் பெறும்.
நமது நாட்டில் முக்கிய நான்கு தூண்களாக, சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் (Legislature), அரசு அதிகாரிகள் (Executive), நீதித்துறை (Judiciary) மற்றும் பத்திரிகை (Media) உள்ளன.
இவை அனைத்தும் மிகவும் முக்கியமானது. ஒரு வாகனத்தில் எல்லா பாகங்களும், சரியாக இயங்கினால் தான், அது சீராக ஓடும். ஏதேனும், ஒரு பாகம் குறைபட்டாலும், வாகனம் பழுதடைந்து நின்று விடும். அது போலவே, நிர்வாகம் அனைத்தும் சரியாக இயங்கினால் தான், நாடு நல்ல முறையில் வளர்ச்சி அடையும்.
ஒருவருக்கு ஒருவர் குறை சொல்வதை விட்டு விட்டு, அனைவரும் சேர்ந்து இயங்குவது முக்கியம். ஆனால், சமீப காலமாக அந்த ஒற்றுமை இருப்பது இல்லை. நீயா..? நானா.? என போட்டி போடும் வகையில், ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி, அதன் மூலம் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது, மிகவும் வருத்தமாக உள்ளது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்தியில் ஒரு திட்டத்தை நிறைவேற்றினால், அது குறித்து மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதும், மாநிலத்தில் ஆளுநர் எதை சொன்னாலும், அதற்கு நேர் எதிர் கருத்துக்களை, ஆளும் கட்சியினர் தெரிவிப்பதும் என தொடர்ந்து நிழல் யுத்தம் நடந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல நல்ல திட்டங்கள் தாமதம் அடைகின்றன. இதன் காரணமாக, கடைசியில் பாதிக்கப் படுவது, அப்பாவி ஏழை, எளிய மக்கள் என்பதனை மறந்து விடுகிறார்கள் போலும்? என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
யார் பெரியவர்? என போட்டி போடாமல், நாம் அனைவரும் மக்களுக்கு சேவை செய்யும் சேவகர்கள், அதற்காகவே மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் என்ற எண்ணத்துடன் செயல் பட்டால், நல்ல பலன் கிடைக்கும். அரசியல் கடந்து, எல்லோரும் ஒன்று பட்டு, ஒன்றாக வேலை செய்தால் நாடும், மக்களும் நலம் பெறுவர்.
ஒன்று படுவோம்… வெற்றி பெறுவோம்…
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai