மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தி.மு.க., நிகழ் பட்ஜெட்டிலும் வழக்கம்போல ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது. இதுதான் பா.ஜ.க.வினர் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.
தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் 2022 – 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு ஆகியவை தொடர்பாக விவாதிக்க வேண்டுமென முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகர் அப்பாவி இதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார். இதனால், அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். ஆனால், பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. குறிப்பாக, தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த முக்கிய வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், பெண்கள் கடும் அதிருப்தியடைந்தனர். அதேபோல, ஜெயலலிதா வழங்கிவந்த தாலிக்கு தங்கம் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதன் மூலம் அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையறிந்த பெண்கள் தி.மு.க. அரசு மீது கடும் ஆத்திரமடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களில் ஏராளமானவை மத்திய அரசின் திட்டங்களாகும். இதை தமிழக அரசு திட்டங்கள் போலவும், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போலவும் அறிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஜல்ஜீவன் எனப்படும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர், கிராமப்புற சாலை மேம்பாடு, சுய உதவிக்குழுக்களுக்கான நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு திட்டங்களாகும். அதேபோல, சில திட்டங்களுக்கு வெட்டியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஈரோடு ராமசாமியின் கொள்கை கோட்பாடுகளை 21 மொழிகளில் வெளியிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக செய்யப்பட்ட செயல் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில் ஏழைகளுக்கு பயன்படாத பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது.