கூட்டணியிலும் புகைச்சல்… உட்கட்சியிலும் பூசல்: பரிதாப தி.மு.க.!

கூட்டணியிலும் புகைச்சல்… உட்கட்சியிலும் பூசல்: பரிதாப தி.மு.க.!

Share it if you like it

தி.மு.க.வில் கூட்டணியில் ஒருபுறம் புகைச்சல் ஓடிக்கொண்டிருக்க, மற்றொருபுறம் உட்கட்சி நிலவரமும் கலவரமாக இருப்பதால், கையை பிசைந்து வருகிறது அறிவாலயம்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் தி.மு.க. கூட்டணியே அதிகம் வெற்றிபெற்றது. ஆனால், இதில் நடந்த உள்குத்துகள்தான் கூட்டணிக் கட்சியினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. அதாவது, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம், தி.மு.க.வினர் போட்டி வேட்பாளர்களாக குதித்தனர். இதனால், கூட்டணிக் கட்சிகளின் பெருவாரியான வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஆகவே, தி.மு.க.வினர் மீது கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தி மற்றும் ஆத்திரத்தில் இருந்தன.

இந்த சூழலில், கும்பகோணம் மாநகராட்சியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தி.மு.க., மற்ற 20 மாநகராட்சிகளின் மேயர் பதவியை தானே வைத்துக் கொண்டது. இதனால், அதென்ன ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு. கொடுத்தால் கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்குமே ஆளுக்கொரு மாநகராட்சி மேயர் பதவியை கொடுக்க வேண்டும். அல்லது யாருக்குமே கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தவிர்த்த மற்ற கூட்டணிக் கட்சிகள் உள்ளுக்குள் புழுங்கி வந்தன.

இது ஒருபுறம் இருக்க, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி சேர்மன், துணை சேர்மன் பதவிகளுக்கும் தி.மு.க.வினர் போட்டியில் குதித்து வெற்றியும் பெற்று விட்டனர். இது கூட்டணிக் கட்சியினரை மேலும் உசுப்பேற்றி விட்டது. ஆகவே, இனியும் பொறுத்திருந்தால் தி.மு.க.வினரின் அராஜகத்தை தாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்த கூட்டணிக் கட்சியினர் பொங்கி எழுந்து விட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தூண்டி விட்டு, எதிர்ப்புக் குரல் கொடுக்க வைத்தனர்.

அதன்படி, கூட்டணிக் கட்சியினரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் சேர்மன், துணை சேர்மன்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார் திருமாவளவன். இதைத் தொடர்ந்து, தி.மு.க.வினரை ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டார் ஸ்டாலின். ஆனால், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாருமே பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால், தலைவர் பேச்சை கேட்காத தொண்டர்கள் என்று தி.மு.க.வினரை வெளுத்து வாங்கினர் நெட்டிசன்கள்.

அதேசமயம், கொடுத்த இடங்களும் குறைவு, அதுவும் தி.மு.க.வினராலேயே பறிக்கப்பட்டு விட்டது என்ற விரக்தியில் இருக்கிறார்கள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள். ஆகவே, பதவி கிடைக்காத இடத்தில் எதற்கு இருக்க வேண்டு என்ற கோவத்தில், தி.மு.க. கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு கூட்டணிக் கட்சிகள் வெளியேறினால், சட்டமன்றம் மட்டுமல்லாது ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளிலும் தி.மு.க.வின் பலம் குறைந்துவிடும். காரணம், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் தி.மு.க. சேர்மன் பதவிகளை கைப்பற்றி இருக்கிறது.

ஆகவே, கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது தி.மு.க. தலைமை. அதன்படி, எங்கெல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க.வினர் நின்று வெற்றிபெற்றார்ளோ, அவர்களை எல்லாம் கட்சியைவிட்டு தற்காலிக நீக்கி வருகிறது. அதோடு, தி.மு.க.வினர் எதிர்த்துப் போட்டியிட காரணமாக இருந்த மாவட்டச் செயலாளர்களையும் கட்சித் தலைமை தற்காலிக நீக்கி வருகிறது. இதனால், சொந்தக் கட்சியினரே தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

எனினும், தி.மு.க. தலைமையின் இத்தகைய நடவடிக்கையை வெறும் கண்துடைப்பாகவே பார்க்கின்றனர் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள். காரணம், பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுவது தி.மு.க.வின் தந்திரம் என்பதுதான். எனவே, தி.மு.க. தலைமையின் நாடகத்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நம்பத் தயாராக இல்லை. எனவே, அதிருப்தி மனநிலையிலேயே இருந்து வருகிறார்கள். அதேபோல, கூட்டணிக் கட்சிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த முறை சட்டமன்றத் தேர்தலிலும், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிகளிலும் நாம் வெற்றிபெற்றிருப்போம். அப்படி இருக்க, கூட்டணிக் கட்சிகளுக்காக இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கட்சியை விட்டு நீக்குவதா என்று தி.மு.க.வினரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதன் காரணமாக, சிலர் கட்சி மாறவும் தயாராகி வருவதாக தகவல். ஆகவே, கூட்டணிக் கட்சியை சமாதானப்படுத்துவதா அல்லது கட்சியினரை சமரசம் செய்வதா என்று தெரியாமல் கையை பிசைந்து வருகிறது தி.மு.க. தலைமையான அறிவாலயம்.


Share it if you like it