பா.ஜ.க.வைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முப்புடாதி. இவர், பா.ஜ.க.வின் கடையநல்லூர் ஒன்றிய பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மகன் மாரியப்பன், பா.ஜ.க. ஐ.டி. விங்கின் தென்காசி மாவட்டத் துணைத் தலைவராக இருக்கிறார். இந்த சூழலில், 2021-ல் நடந்த விடுபட்ட மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், நெடுவயல் ஊராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தலைவரானார் முப்புடாதி. இங்கு தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் வார்டு மெம்பர்களாக வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த ஊராட்சியின் செயலாளராக இருப்பவர் கணபதி. இவரும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில், ஏற்கெனவே தலைவர் பதியேற்பதற்கு முன்பு செய்த பழைய வேலைகளுக்கான பில்லை திருத்தம் செய்து, புதிய பில்கள் போல காட்டி, முப்புடாதியிடம் கையெழுத்து வாங்கி வந்திருக்கிறார் செயலாளர் கணபதி. இந்த விஷயம் முப்புடாதிக்கு தெரியவரவே, கணபதியை தட்டிக் கேட்டிருக்கிறார். இதனால், கடந்த சில மாதங்களாகவே தலைவர் முப்புடாதிக்கும், செயலாளர் கணபதிக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்திருக்கிறது. இது ஒரு கட்டத்தில் வெடிக்கவே, தகராறாக மாறியிருக்கிறது.
இதையடுத்து, தலைவரையும், செயலாளரையும் சமாதானப்படுத்துவதற்காக கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன், பி.டி.ஓ. ஆகியோர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, முப்புடாதியும் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அப்போது அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துறை, ஒன்றிய அலுவலகத்தின் வாயிலில், அதுவும் அதிகாரிகள் முன்னிலையிலேயே முப்புடாதியை சரமாரியாக தாக்கி இருக்கிறார். மேலும், அவருடன் வந்த ஆதரவாளர்களும் உருட்டுக் கட்டையை கையில் வைத்துக் கொண்டு தாக்க முற்பட்டிருக்கிறார்கள்.
இதில் வேதனை என்னவென்றால், தகவலறிந்து கடையநல்லூர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்திருக்கிறார்கள். ஆனால், தி.மு.க.வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கைகட்டி வாய்பொத்தி நின்றிருக்கிறார்கள். இந்தக் காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டனர். இந்த வீடியோதான் தற்போது தமிழகத்தில் வைரலாகி தி.மு.க.வின் அராஜகத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு சமூக ஆர்வலர்களும், சாமானிய மக்களும் தி.மு.க.வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பா.ஜ.க. தலைவர் முப்புடாதியை தாக்கிய தி.மு.க. குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே ரவுடிளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த சம்பவம்.