பிரதமர் மோடி 15 லட்சம் தருவதாகச் சொல்லவில்லை என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.
சென்னையில் இன்று நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், தி.மு.க. அரசின் திட்டங்களை பட்டி.யலிட்டவர், “மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பாக நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணங்களையெல்லாம் மீட்டுக் கொண்டு வந்து நாட்டில் இருக்கும் மக்களுக்கு ஒரு நபருக்கு தலா 15 லட்சம் கொடுப்பதாக பிரதமர் மோடி சொன்னார். 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரம் கொடுத்திருக்கிறாரா, அதுவும் வேண்டாம் 15 ரூபாயாவது கொடுத்திருக்கிறாரா? இதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? மாதம் 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னார். அதனையும் நிறைவேற்றவில்லை. பாஜகவை எதிர்ப்பதால் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், அதனைப் பற்றி நாம் இம்மியளவும் கவலைப்படக்கூடாது. லட்சியம், கொள்கை மட்டுமே நம்முடைய இலக்கு. அதனால் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், 2014-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார். அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி சொல்லவில்லை.
திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? தங்கள் மருமகன்தான் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே. உங்களுக்கு என்ன கவலை? முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் திமுக அரசு? கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் திமுக அரசின் முதல்வருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
மேலும், பிரதமர் மோடி பேசிய காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்.