தி.மு.க. அரசியல் கட்சியே கிடையாது, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் கருத்தாக இருக்கிறது. இப்படி கூறக் காரணம் என்ன? என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.
அதாவது, ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றால் என்ன நடக்கும்… முதலாளியாக இருப்பவர்கள் தங்களது நிறுவனத்தை திறம்பட நடத்த உயர் பதவிகளில் சிலரை நியமிப்பார்கள். பின்னர், அந்த உயர் அதிகாரிகள் மூலம், கடைநிலை ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவார்கள். முடிந்தளவுக்கு சக்கையாக பிழிந்து விட்டு, அந்த கடைநிலை ஊழியரை கழட்டி விட்டு விடுவார்கள். மாறாக, பணமும், பதவி உயர்வும் அந்த உயர் அதிகாரிகளுக்குக் கிடைக்கும். அதேபோலதான், தி.மு.க.விலும் தலைவராக இருக்கும் முதலாளி தனக்குக் கீழே மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நிர்வாகிகளாக சிலரை நியமிக்கிறார்கள்.
அவர்களும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு கடைமடை நிர்வாகிகளின் உழைப்பைச் சுரண்டுவார்கள். கடைசியில் பலனை அனுபவிப்பது என்னவோ, மாவட்ட, மாநில நிர்வாகிகளும், தலைவரும்தான். அடிமட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் புறங்கையைக் கூட நக்க முடியாது. ஆனால், இதே அ.தி.மு.க. போன்ற கட்சிகளாக இருக்கட்டும், அடிமட்டத் தொண்டன் கூட அமைச்சராக பதவி வகிக்க முடியும். அதனால்தான், தி.மு.க. அரசியல் கட்சியல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று கூறுகிறார்கள்.
அடுத்ததாக, தி.மு.க.வில் உயர் பதவிகளில் இருக்கும் பலரும், கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள்தான். மேலும் பலர் மறைமுகமாக கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகளாக இருக்கிறார்கள். உதாரணமாக, கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறனின் மகன்களான தயாநிதி, கலாநிதி மாறன்கள் சன் நெட்வொர்க் குழுமத்தின் தலைவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம், பல்வேறு மாநிலங்களில் தொலைக்காட்சி சேனலை நடத்தி வருவதோடு, சினிமா படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், எஃப்.எம். ரேடியோ முதல் டி.டி.ஹெச்., கேபிள் நிறுவனம், ரியல் எஸ்டேட் பிசினஸ் வரை மாறன் சகோதரர்கள் செய்யாத பிசினஸ்களே இல்லை எனலாம்.
குறிப்பாக, 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் தி.மு.க. தனித்தும், மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் ஆட்சி செய்தபோது, மாறன் சகோதரர்கள் போடாத ஆட்டம் இல்லை. ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்கள். தமிழகம் மட்டுமல்லாது, தென்னிந்திய கார்ப்பரேட் உலகமே இவர்களது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. சன் நெட்வொர்க்கின் ஜெமினி டி.வி. ஆந்திரப் பிரதேச தொலைக்காட்சி ஊடக சந்தையில் 43.7 சதவீதமும், உதயா டி.வி. கர்நாடகா மாநில ஊடக தொலைக்காட்சி சந்தையில் 39.5 சதவீதத்தையும் கொண்டிருந்தன. தவிர, சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன், மல்டிசிஸ்டம் ஆபரேட்டர் அல்லது எம்.எஸ்.ஓ., தமிழ்நாட்டில் 90 சதவீத சந்தையைக் கொண்டிருந்தது என்றால், சன் நெட்வொர்க்கின் அரசியல் பின்புலம் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கக்கூடும் என்று எண்ணிப் பாருங்கள்.
இதேபோல, மாஜி மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட பலரும் மறைமுகமாக கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகளாக வலம் வருகிறார்கள். மேலும், தற்போதைய தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன், இலங்கையில் 26,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அதேபோல, தமிழகத்தில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் துரைமுருகன் உட்பட பலரும் வெளியில் தெரியாமல் கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இவர்களது சிந்தனை முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளின் சிந்தனையைப் போன்றுதான் இருக்கும். அதாவது, அடிமட்ட நிர்வாகிகளின் உழைப்பையும், தொண்டர்களின் உழைப்பையும் சுரண்டி, தாங்கள் பலனடையும் தந்திரசாலிகள். ஆகவேதான், தி.மு.க. அரசியல் கட்சியல்ல, ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று இதர அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும், சாமானிய மக்களும் கூறிவருகிறார்கள்.