வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் விரோதி. ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே கட்சியை நடத்தினாலோ, ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தினாலோ, அக்கட்சியும் வளராது, திறமைசாலிகளும் காணாமல் போய்விடுவார்கள் என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை பிரதமர் மோடி வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இந்தியாவில் தமிழகம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகளில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் தி.மு.க. என்கிற கட்சியின் தலைமை அண்ணாதுரைக்குப் பிறகு அக்கட்சியின் தலைவரான கருணாநிதி குடும்பத்தின் கையில்தான் இருக்கிறது. அதேபோல, உ.பி.யில் சமாஜ்வாதி என்கிற கட்சி முலாயம் சிங் யாதவ் குடும்பத்தின் கையில்தான் இருக்கிறது. இந்த நிலையில்தான், தி.மு.க. உள்ளிட்ட வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் பிரமதர் மோடி.
இதுகுறித்து ஆங்கில நியூஸ் ஏஜென்ஸி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “இந்தியாவில் தமிழகம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சில குறிப்பிட்ட கட்சிகள் வாரிசு அரசியல்தான் நடத்தி வருகின்றன. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 பேர் முக்கிய பதவிகளில் இருப்பதாக ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அக்கட்சியின் தலைவர்கள் தங்களை சமதர்மவாதிகள் எனக் கூறிக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் சோஷலிஸ்ட்கள் யாரும் தங்களது வாரிசுகளை அரசியலில் களமிறக்கவில்லை. உதாரணமாக, பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரும் சோஷலிஸ்ட்தான். அவருடைய குடும்பத்தை யாருக்காவது தெரியுமா?
இன்றைய இளைஞர்களுக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருவதற்கு வாரிசு அரசியல்தான் காரணம். ஒரு குடும்பம் நடத்தும் கட்சிக்கு அவர்களது குடும்பத்தின் மீதுதான் அக்கறை இருக்கும். நிச்சயமாக நாட்டின் மீது அக்கறை இருக்காது. ஆகவே, வாரிசு அரசியல் நடத்தும் கட்சியும் வளராது, அக்கட்சியில் திறமைசாலிகளும் காணாமல் போய்விடுவார்கள். அதேசமயம், பா.ஜ.க. ஒரு குடும்பத்தின் பிடியிலும் இல்லை, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கட்சி நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. இதனால், ஒரு குடும்பத்தை புகழ்ந்தால் மட்டுமே கட்சியில் நீடிக்க முடியும் என்கிற நிலையும் இல்லை. இதனால்தான், இளைஞர்களை ஈர்க்கும் கட்சியாக பா.ஜ.க. வளர்ச்சியடைந்து வருகிறது. ஆகவே, நாங்கள்தான் உண்மையான சோஷலிஸ்ட்கள்” என்று வாரிசு அரசியல் நடத்தும் தி.மு.க.வுக்கு மறைமுகமாக சவுக்கடி கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.