தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய “தி.மு.க. ஃபைல்ஸ்-2” ஆவணங்களையும், 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஊழல்கள் குறித்த ஆதாரங்களையும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கவர்னரிடம் வழங்கினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தி.மு.க. ஃபைல்ஸ்-1 வெளியிடப்பட்டது. இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தி.மு.க. ஃபைல்ஸ்-2 தொடர்பான ஆவணங்களை சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அண்ணாமலை நேரடியாக வழங்கி இருக்கிறார். அப்போது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தோம். ஆளுநரிடம் தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய தி.மு.க. ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.