பஞ்சு மிட்டாயில் இருக்கும் நிறத்திற்குத் தடை விதித்திருக்கும் திமுக, தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானம் பாதிக்கப்படும் என்பதால், அதை விட பல மடங்கு உடல் நலனுக்குக் கெடுதலான டாஸ்மாக் சாராயத்துக்கு தடை விதிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
இந்தியாவில் இதுவரை 17 பாராளுமன்றத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. வரவிருப்பது 18 ஆவது தேர்தல். முதன்முறையாக நமது பிரதமர் மோடி அவர்கள்தான் மீண்டும் பிரதமராகப் போகிறார் என்ற தேர்தல் முடிவு உறுதியாகத் தெரிந்து நடக்கும் தேர்தல் இதுதான். மற்ற கட்சிகள் ஜாதி அரசியல் செய்யும்போது, நமது பிரதமர் ஆட்சி, பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் ஆகியோரின் முன்னேற்றத்துக்கான, சாமானிய மனிதர்களுக்கான ஆட்சியாக நடைபெறுகிறது. பத்து ஆண்டுகளில், நமது பிரதமர் மீது மட்டுமல்ல, அவரது அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாத நேர்மையான நல்லாட்சி நடைபெறுகிறது.
காங்கிரஸ் ஆட்சி, குறுகிய கண்ணோட்டத்தில் நடந்தது. தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொள்வது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி நாட்டின் உட்கட்டமைப்புக்குச் செலவு செய்தது 2 லட்சம் கோடி. பாஜக இந்த ஆண்டு உட்கட்டமைப்புக்கு ஒதுக்கீடு செய்துள்ள நிதி 11 லட்சம் கோடி. வேகமான வளர்ச்சியை நோக்கி நமது நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. 13 ஆண்டுகள் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும், பத்து ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகவும் பொறுப்பில் இருந்தும், சற்றும் ஓய்வு எடுக்காமல், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார் நமது பிரதமர் அவர்கள்.
அதே நேரம், தமிழகத்தில், ஜனநாயகம் எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி எல்லாம்தான் இருக்கிறது. ஊழல், குடும்ப ஆட்சியில் திளைத்து, ஒரு குடும்ப நலனுக்காக, அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசாங்கம், கடந்த 33 மாதங்களாக கதை திரைக்கதை வசனமாக நடக்கிறதே தவிர, மக்களுக்கான அரசியலாக இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின், மூன்று முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டும் ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. உத்திரப் பிரதேச மாநிலம் 33 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், தமிழக அரசு 6.60 லட்சம் கோடி முதலீட்டை மட்டுமே பெற்றுள்ளது என்று கூறுகிறது. அதிலும் முதலீடு நமக்கு வந்து சேரவில்லை. மூன்று ஆண்டுகளில், தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி வைத்துள்ளது திமுக.
இன்றைய தினம் வெளியிடப்பட்ட தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, முழுவதுமே மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி வைத்திருப்பது மட்டும்தானே தவிர, புதிய திட்டங்கள் எதையும் திமுக அறிவிக்கவில்லை. தங்கள் தேர்தல் அறிக்கையில், 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை என்று கூறிவிட்டு, நிதி நிலை அறிக்கையில் 60,000 பேருக்கு அரசு வேலை கொடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறது. ஆனால் உண்மையில் அரசுப் பணிகள் வழங்கப்பட்டது 10,400 பேருக்கு மட்டுமே. ஆனால் நமது பிரதமர் மோடி அவர்கள், 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ற வாக்குறுதியை முழுவதுமாக நிறைவேற்றியிருக்கிறார்
திமுக அரசு நிதி நிலை அறிக்கையில், மத்திய அரசின் போஷான் திட்டத்தை, ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற பெயர் மாற்றியிருக்கிறது. கடந்த 1919 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் கிராமப்புறங்களில் குழாய்க் குடிநீர் வெறும் 17% மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அனைத்து வீடுகளுக்கும் குழாயில் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், செயல்படுத்தப்பட்ட பிறகே, 46 லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதை தங்களது திட்டம் என்று காட்ட முயற்சிக்கிறது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு, கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பிரதமரின் கிராம சாலை திட்டம், முதல்வரின் கிராமச் சாலை திட்டமாக உருமாறியிருக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, மத்திய அரசின் வழிகாட்டுதலின் பெயரிலேயே, வங்கிகள் கடன் உதவி வழங்குகின்றன. இதில் திமுக அரசின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை. சகி நிவாஸ் என்ற பெயரில், மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் விடுதிகளுக்கு, தோழி விடுதி என்று பெயர் மாற்றி விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது திமுக. மக்களுக்கு எதிராக, வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறது திமுக. கோபாலபுரத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே செயல்படுகிறது. பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து, மத்திய அரசின் மீது பழி போட்டு அரசியல் செய்கிறது திமுக.
பஞ்சு மிட்டாயில் இருக்கும் நிறத்திற்குத் தடை விதித்திருக்கும் திமுக, தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானம் பாதிக்கப்படும் என்பதால், அதை விட பல மடங்கு உடல் நலனுக்குக் கெடுதலான டாஸ்மாக் சாராயத்துக்கு தடை விதிக்கவில்லை. மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் முருகன் அவர்களுக்குத் தகுதியில்லை என்று கூற டி.ஆர்.பாலுவுக்கு என்ன தகுதி இருக்கிறது? வாரிசு அரசியல் செய்து கொண்டிருக்கும் ஸ்டாலின், உதயநிதி, டி.ஆர்.பி.ராஜா இவர்கள்தான் தகுதியற்றவர்கள். ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில், ராஜீவ் காந்தி கொலையாளிகளைக் கட்டி அணைத்த திமுகவினரோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சியினர் எப்படி வாக்கு சேகரிக்கப் போகிறார்கள்?
இரண்டு திராவிடக் கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு பயந்து, இரண்டு பங்காளிக் கட்சிகளும் ரகசியக் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கின்றன.
கடன்கார மாநிலமாக இருக்கும் தமிழகத்தை வளர்ச்சி மாநிலமாக மாற்ற வேண்டும். சென்னையை புதிய கட்டமைப்புடன் மீள் உருவாக்கம் செய்ய வேண்டும். ஊழல், குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். இவற்றைச் செய்ய பாஜகவால் மட்டும்தான் முடியும். அதற்கு முதல் படியாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில்,
நரேந்திர மோடி என்ற ஒற்றை மனிதரை நம்பி தமிழகம் வாக்களிக்க வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் லட்சியத்துடன் ஓய்வின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது பிரதமர் கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும்.