‘அமைச்சர் வரட்டும்’ – தட்டில் பிரியாணி 2 மணிநேரம் காத்திருந்த பார்வையற்ற    மாணவர்கள்!

‘அமைச்சர் வரட்டும்’ – தட்டில் பிரியாணி 2 மணிநேரம் காத்திருந்த பார்வையற்ற மாணவர்கள்!

Share it if you like it

பார்வையற்ற மாணவர்களை அமைச்சர் உதயநிதி இரண்டு மணி நேரம் காக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விதமாக அண்மையில் தஞ்சாவூர் வந்தார். அந்த வகையில், தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளுக்காக தஞ்சாவூர் அரசு பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் உதயநிதி கையால் மட்டன் பிரியாணி பரிமாறுவதற்கான ஏற்பாட்டினை தி.மு.க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

இந்நிலையில், மதியம் ஒரு மணிக்கு தட்டில் மட்டன் பிரியாணியை போட்டு அதன்முன் பார்வையற்ற மாணவர்களை உட்கார வைத்து காக்க வைத்துள்ளனர். கிட்டதட்ட இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார்.

அந்தவகையில், உதயநிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் கூறியதாவது ; பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக மதிய உணவாக மட்டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை, அமைச்சர் உயதநிதி தன் கையால் பரிமாறுவார் என்று கூறியிருந்தனர்.

பார்வையற்ற மாணவர்களுக்கு உதயநிதி எப்படி இருப்பார் என்றே தெரியாது. எனினும், அவரது குரலையாவது கேட்கலாம் என பசியோடு மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் வந்த உடனேயே, சில தட்டுகளுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன. இதையடுத்து, மாணவர்களை தி.மு.க.வினர் சாப்பிட சொன்னார்கள். சில நிமிடங்கள் மட்டுமே இருந்த உதயநிதி ஒரு வார்த்தை கூட மாணவர்களிடம் பேசாமல் திரும்பி சென்று விட்டார். ஏன் இவ்வளவு நேரமாக சாப்பிடாமல் இருக்கிறீர்கள் என்று கூட அவர் கேட்கவில்லை.

பார்வையற்ற மாணவர்கள் பற்றியும், பசியை பற்றியும் நினைக்காமல் இதுவும் ஒரு நிகழ்ச்சியாக நினைத்து விட்டார் போல். மாணவர்கள் சாப்பிட்டு முடிக்க மாலை நான்கு மணி ஆகிவிட்டது என்று வேதனையுடன் கூறினார்.


Share it if you like it