‘தமிழ் மொழி போலி நாடக அரசியல் செய்யாதீர்கள்’ என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தி.மு.க.வை மிக கடுமையாக சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் ;
தமிழ் எழுத படிக்க தெரியாத மாணவ தலைமுறையை உருவாக்கும் திராவிட அரசியல். நேற்று சர்வதேச தாய் மொழி தினம். முதல்வர் ஸ்டாலின் தமிழை பாதுகாப்போம் என கூறியிருக்கிறார். அதே சமயம் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் உருது மாணவர்கள் தமிழ் தேர்வு விலக்கு அளிக்கப்படும் என விளக்கம் கொடுத்துள்ளார். இந்த விலக்கு கடந்த பல ஆண்டுகளாக தொடர்கிறது.
தமிழ் எழுத படிக்க தெரியாத தலைமுறையை உருவாக்கியது தான் திராவிட கட்சிகள் செய்த சாதனை. அண்டை மாநிலங்களில் அம்மாநில மொழி தெரியாமல் கல்வி கற்கும் நிலை இல்லை. தமிழ்நாட்டில் தமிழே படிக்க வேண்டாம் என மாநில அமைச்சரே அறிவிப்பது இவர்களின் செயல்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வேறு மொழி மாணவர்களுக்கான தமிழ் பாடம் அடிப்படை தமிழ் தான். அதுவும் தேர்வில் விலக்கை தொடர்ந்து தருவது தமிழ் மொழி கல்வியை கேவலபடுத்துவது. தமிழ் எழுத படிக்க தெரியாது என்பது பெருமையாக கருதும் சமூகத்தை ஊக்கப்படுத்த விரும்புகிறாரா தமிழக முதல்வர். நேற்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு தமிழைத் தேடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தாய் மொழி, தாய் மொழி வழி கல்வியை வலியுறுத்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டும் அல்லவா? ஆனால் அதனை கூற மாட்டார்கள். மம்மி, டாடி கலாச்சாரத்தை வளர்க்கும் கான்வென்ட் படிப்பை ஒருபுறம் ஆதரித்து கொண்டே தமிழை எங்கே தேடுவது. வங்க கடலில் தான் தேட வேண்டும். தமிழ் மக்கள் தமிழை வைத்து போலி நாடகம் நடத்தும் அரசியல்வாதிகளை புரிந்து கொள்ள வேண்டும். இனியும் தமிழ் மொழி போலி நாடக அரசியல் செய்யாதீர்கள். தமிழ் படிப்பதும், தமிழ் வழி கல்வி அளிப்பதையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.