பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கிவிட்டு, சமூக நீதி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3-ம் தேதி தி.மு.க. நடத்திய அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு மாநாட்டில், சமூகநீதி குறித்து முதல்வர் ஸ்டாலின் பாடம் நடத்தியிருக்கிறார்.
தகுதியானவர்களுக்கு கிடைக்கவேண்டிய கட்சித் தலைமை, ஆட்சித் தலைமையை தங்கள் குடும்பத்தினருக்காகப் பறிப்பதற்குப் பெயர்தான் சமூக நீதியா? தி.மு.க. தலைவராகவோ அல்லது தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி குடும்பத்தைச் சாராத ஒருவர் முதல்வராகவோ வர முடியுமா?
உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்திலும் துணை முதல்வராக்கப்படலாம் என தி.மு.க.வினரே பேசிக் கொள்கின்றனர். மகனுக்குப் பதிலாக, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதவ்வராக்க வேண்டும். அதன் பிறகு சமூக நீதிகுறித்து அவர் பேசினால், வீடு தேடிச் சென்று பாராட்டத் தயாராக இருக்கிறேன்.
“உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய பா.ஜ.க. அரசு வழங்கிவிட்டது. அனைத்து ஏழைகளுக்கும் தரலாமே, அது என்ன உயர் ஜாதி ஏழைகள்?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 10 சதவீத இடஒதுக்கீடு என்பது உயர் ஜாதி ஏழைகளுக்கானது அல்ல. இடஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத சமூகத்தைச் சேர்ந்த ஏழைகள் இதனால் பயன்பெறுவார்கள். இதை மறைத்துவிட்டு, அரசியலுக்காகப் பேசியிருக்கிறார்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் சமூக நீதி. அதை செய்துவிட்டு, இனி சமூக நீதி குறித்து முதல்வர் பேச வேண்டும் என கூறியுள்ளார்.