கல்யாண மண்டபம், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு உண்டு என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். இதையடுத்து, தி.மு.க.வின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்கள் இதே கருத்தை முன்மொழிந்தனர். இதையடுத்து, தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இந்த, அரசு அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது. அந்த வகையில், பல்வேறு வாக்குறுதிகளை விடியல் அரசு இன்று வரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதில், ஒன்றுதான் பூரண மதுவிலக்கு.
இதனிடையே, தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, பெண்களும் மதுவிற்கு அடிமையாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ;
கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக
வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று பா.ஜ.க. சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.