மத ரீதியில் இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. முதல்வர் தெரிவிதுள்ளார்.
எதிர்வரும் மே-10ல் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் உ.பி. முதல்வருமாக இருப்பவர் யோகி ஆதித்யநாத். இவர், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;
உ.பி.யில் கடந்த 6 ஆண்டுகளாக எந்த கலவரமும், கட்டுப்பாடுகளும் இல்லை. பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில் எந்த கலவரமும் நடக்கவில்லை. இரட்டை இன்ஜீன் கொண்ட பா.ஜ.க., அரசு பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்ததுடன், அதன் முதுகெலும்பை உடைத்துவிட்டது. பி.எப்.ஐ. அமைப்பிடம் காங்கிரஸ் கெஞ்சியதுடன், அரசியல் சாசனத்திற்கு எதிராக மத ரீதியில் இட ஒதுக்கீட்டை வழங்கியது. 1947-ல் மத ரீதியில் நாடு பிரிக்கப்பட்டது. மத ரீதியில் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க முடியாது. இன்னொரு பிரிவினைக்கு நாங்கள் தயாராக இல்லை.
அதிகாரமளித்தலில் மட்டுமே பா.ஜ.க.விற்கு நம்பிக்கை உள்ளது. 2024 ஜனவரியில் ராமர் கோயில் திறக்கப்படும். கடவுள் ஹனுமன் பிறந்த மாநிலம் கர்நாடகா. 2014-க்கு முன்பு வரை கர்நாடகாவில் தலைமை ஏதும் இல்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான், வளர்ச்சி பணிகள் நடந்தன. காங்கிரஸ் ஆட்சியின் போது வளர்ச்சி பணிகள் குறித்து பேசுவார்கள். 5 ஆண்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு அதனை மறந்துவிடுவார்கள். அந்த திட்டத்திற்கான காலக்கெடு முடிந்த பிறகுதான் அதுகுறித்து சிந்திப்பார்கள். ஆனால், பிரதமர் மோடி எந்தவொரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினால், அதனை திறந்து வைப்பார் என யோகி ஆதித்யநாத் கூறினார்.