தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு விளம்பர பலகைகள் வைப்பது அதிகரித்துள்ளது என பா.ஜ.க. எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கோவை சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
ஒடிசா சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஒரு சம்பவத்தின் காரணமாக ரயில்வே அமைச்சகம் செய்த நல்ல விஷயங்களை நாம் மறந்துவிட முடியாது. ஒடிசா ரயில் விபத்தில் எதையும் மறைக்கவும், யாரையும் காப்பாற்றவும் மத்திய அரசு விரும்பவில்லை. எதிர்க்கட்சி சொல்வதற்கு முன்பாகவே விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் மரியாதையை, பெருமையை சிதைக்கும் வகையில் ராகுல்காந்தியின் வெளிநாட்டு பேச்சுகள் உள்ளன. மேகேதாட்டு அணை விவகாரத்தை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக அரசு எப்படி அணுகப்போகிறது? வெறும் அறிக்கை மட்டும் அளித்துவிட்டு வேடிக்கை பார்க்கப்போகிறதா அல்லது உண்மையாகவே தமிழகத்தின் நலனை காப்பாற்றப்போகிறார்களா என்பதை வரக்கூடிய காலத்தில் பார்ப்போம்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தபோதும், மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு. முதல்வர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் பயணம் உண்மையில் பயன் அளிக்கக்கூடியதா என்பதை அரசு சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் விளக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விளம்பர பலகைகள் வைப்பது அதிகரித்துள்ளது. விளம்பர பலகைகள் வைக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினை பெரிதாகும்போதுதான் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கிறது என கூறினார்.