தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என வேல்முருகன் வேதனையுடன் தெரிவித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன். இவர், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு, தி.மு.க. தலைமை உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதனை மெய்ப்பிக்கு வகையில், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வி.சி.க.விற்கு, குறைவான சீட்டுக்களை தி.மு.க. வழங்கி இருந்தது. இது, எங்களை அவமதிக்கும் செயல் என வி.சி.க.வின் மூத்த தலைவர்கள், தி.மு.க.விற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்யும் பொருட்டு வீடியோ கான்பரன்ஸில் திருமாவளவன் உருக்கமுடன் பேசி இருந்தார்.
இந்த நிலையில் தான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க. அரசு மீது தனது கடும் அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்தி இருக்கிறார். `வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வீடுகட்டிக் கொடுக்கப்படவில்லை. வன்னியர் பெண் பாதிக்கப்பட்டால் அவருக்கு உரிய நிதியுதவி செய்யப்படுவதில்லை. அதேபோல, துணைவேந்தர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் மேயர் உள்ளிட்டவற்றில் வன்னிய சமூகத்திற்கு உரிய பிரதிநித்துவம் இல்லை.
இப்படியாக, நிகழும் அநியாயங்களை தமிழக அரசுக்கு நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன். ஆனால், தி.மு.க.வில் என்னைப் பத்தோடு பதினொன்றாகத்தான் நடத்துகிறார்கள். ஒரு கட்சியின் தலைவர் என்கிற மரியாதையை தி.மு.க. எனக்கு கொடுக்கவில்லை என தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதேபோல, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதே, நிலையை தி.மு.க. தொடர்ந்து கடைபிடித்தால் அது கூட்டணியில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.