தி.மு.க. ஆட்சியில் தங்களது வீடுகளை இழந்த பொதுமக்கள் ஆளும் கட்சிக்கு சாபம் விடுவது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என தி.மு.க. அரசு ஏழை எளியவர்களின் வீடுகளை அகற்றி வருகிறது. அந்த வகையில், ஆர்.ஏ.புரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அண்மையில் தமிழக அரசு இடித்து தள்ளி இருந்தது. இதில், தனது வீட்டை இழந்த முதியவர் கண்ணையா (60) என்பவர் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து இறந்தார். இச்சம்பவம், தமிழகத்தையே அண்மையில் உலுக்கி எடுத்து இருந்தது.

இதனை தொடர்ந்து, சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் இன மக்களின் வீடுகளை கடந்த ஆண்டு விடியல் அரசு இடித்து தள்ளி இருந்தது. ஆனால், இதுகுறித்து, திருமா, பா.ரஞ்சித் உள்ளிட்ட யாரும் தி.மு.க. அரசிற்கு எதிராக வாய் திறக்கவில்லை என்பதே நிதர்சனம்.
இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலினின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக பார்க்கப்படுவது ஔவையார் நகர். இந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பினையும் வழங்காமல் அவர்களின் வீடுகளை தமிழக அரசு சமீபத்தில் இடித்து தள்ளி இருந்தது.
இந்த நிலையில் தான், ஏழை எளியவர்களின் வீடுகளை தமிழக அரசு மீண்டும் இடித்து தள்ளி இருக்கிறது. தங்களது வீடுகளை இழந்த பெண்கள் ஆளும் கட்சிக்கு எதிராக மிகவும் ஆவேசமாக பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம், சென்னை டேவை மக்களுடன் கொண்டாடி விட்டு தற்போது ஏழை எளியவர்களின் வீடுகளை விடியல் அரசு இடித்து தள்ளி இருப்பது சரியா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.