VIP-க்களின் செருப்பை பாதுகாத்த  போலீஸ்?!

VIP-க்களின் செருப்பை பாதுகாத்த போலீஸ்?!

Share it if you like it

தேவர் குருபூஜைக்கு வருகை தந்த முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்கும் பணி காவல்துறையினருக்கு ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்வேன். யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை உண்டு என கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இருப்பினும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே இருந்து வருகிறது. இதுதவிர, கழக கண்மணிகளால் காவல்துறையினர் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் என்பதே நிதர்சனம்.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னை ராயபுரம் பகுதியின் 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருடைய கணவர் ஜெகதீசன். இவர், மதுபோதையில் தெருவில் நின்று கொண்டு அடாவடி செய்து இருக்கிறார். அப்போது, ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் சென்று விசாரித்து இருக்கின்றனர். இதையடுத்து, காவலர்களுக்கும் ஜெகதீசனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. மதுபோதை தலைக்கு ஏறி இருந்த ஜெகதீசன் காவலர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருந்தார். இக்காணொளியை, இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இப்படியாக, தொடர்கிறது இந்த பொற்கால (பொல்லாத) ஆட்சி.

இதனிடையே, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கட்டுபாட்டில் இல்லை. மக்களுக்கு போதிய பாதுகாப்பை தமிழக அரசால் வழங்க முடியவில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் தான், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் மிகச்சிறப்பாக நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என ஏராளமானவர்கள் வருகை தந்தனர்.

ஜாதி, மதம், இனம், மொழி கடந்து தேவர் ஐயாவை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு, உரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய பொறுப்பு காவல்துறையினரையே சாரும். நிலைமை இவ்வாறு இருக்க, முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்கும் பணி காவலர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it