தமிழ் மொழியின் பொக்கிஷம் கிடைத்திருக்கிறது: முதல்வருக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

தமிழ் மொழியின் பொக்கிஷம் கிடைத்திருக்கிறது: முதல்வருக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

Share it if you like it

“சீர்காழியில் கிடைத்த செப்பேடுகள், ஓலைச்சுவடிகளை தொல்லியல் அறிஞர்கள் ஆராய வேண்டும்” என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் : “சீர்காழி சட்டநாதர் கோயில் சீரமைப்புப் பணியின்போது, பூமிக்கடியில் இருந்து பஞ்சலோக சுவாமி சிலைகளும், செப்பேடுகளும் கிடைத்துள்ளன. இந்தச் செப்பேடுகளில் தமிழ் மொழியின் பொக்கிஷங்களில் ஒன்றான தேவாரப் பதிகங்கள் எழுதப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேவாரப் பதிகங்கள் இதுவரை ஓலைச்சுவடிகளில் தான் கிடைத்துள்ளன. சில இடங்களில் கல்வெட்டுகளிலும் காணக் கிடைக்கின்றன. ஆனால், முதல்முறையாக செப்பேடுகளில் தேவாரப் பதிகங்கள் கிடைத்துள்ளது தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதுபோல கடந்த வாரம், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி பாசுரங்களுக்கான உரை அடங்கிய ஓலைச்சுவடிகள், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீர்காழியில் கிடைத்துள்ள சுவாமி சிலைகள், செப்பேடுகள் மற்றும் ஆழ்வார் திருநகரியில் கிடைத்துள்ள ஓலைச்சுவடிகளை தீவிரமாக ஆய்வு செய்து அதில் எழுதப்பட்டிருப்பவற்றையும், அதன் காலத்தையும் துல்லியமாக கண்டறிய வேண்டும். அதன் மூலம் தமிழக வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, தொல்லியல் துறையில் நீண்ட அனுபவமும், தமிழக ஆன்மிக மரபை நன்கறிந்த தொல்லியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இல்லையெனில் இதனை, மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறியுள்ளார்.


Share it if you like it