சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அப்பாவி மக்கள் மீது பல்வேறு அடுக்கு முறைகளை ஏவிய ஆஷ்துரையின் நினைவிடத்தை சீரமைக்கும் தூத்துக்குடி மாநகராட்சியின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தின், கலெக்டராகவும், நீதிபதியாகவும் இருந்தவர் ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் டிஸ்கவர் ஆஷ். அந்நாட்களில், இவரை ஆஷ்துரை என்றே பலர் அழைத்து வந்தனர். சுதந்திரம் வேண்டி போராடும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கியவர். அப்பாவி மக்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தவர். மேலும், கொடூரமான ஒடுக்குமுறைகளை திணித்தவர். இதுதவிர, சுதந்திரம் வேண்டி போராடிய வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் என பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உண்டு. இதன்காரணமாகவே, ஆஷ்துரையை சுதந்திர போராட்ட தீபம் வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், தூத்துக்குடி மாநகராட்சி ஆஷ்துரையின் நினைவிடத்தை பல லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பித்து வரும் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. இதற்கு, அம்மாவட்ட மக்களையும் கடந்து தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.
நாட்டின் விடுதலைக்காக தனது உயிரை கொடுத்த, தியாகி வாஞ்சிநாதனுக்கு (மணியாச்சி ரயில் நிலையம்) அருகே நினைவு மண்டபமோ, நினைவுச் சின்னமோ தற்போது வரை இல்லை. வாஞ்சிநாதன் தியாகத்தை போற்றும் விதமாக மணிமண்டபம் வேண்டும் என பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள், நடத்திய பின்பும் அதற்கு எந்தவித பலனும் இன்று வரை இல்லை என்பதே கசப்பான உண்மை. ஆனால், அப்பாவி மக்களுக்கு பல்வேறு கொடுமைகள் செய்த ஆஷ்துரைக்கு அதிக முக்கியத்துவம் தற்போது வழங்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்து வருகின்றன.