தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், தி.மு.க. பிரமுகர் நடத்திய லாட்டரியில் 62 லட்சம் ரூபாயை ஏமாந்த முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தினம் தினம் சீர்கேடு அடைந்து வருவது ஒருபுறம் என்றால், தி.மு.க. பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், சகோதரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் செய்து வரும் அட்டூழியம், அடாவடிகள் கொஞ்சமல்ல என்பதே நிதர்சனம். அந்த வகையில், சென்னை கொடுங்கையூரில் சோலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவி என்பவர் தனது சொந்த நிலத்தில் வீடு கட்டி இருக்கிறார். இதையறிந்த, தி.மு.க.வின் 34-வது வார்டு கவுன்சிலர் சர்மிளாவின் கணவர் காந்தி என்பவர் மேற்கொண்டு வீடு கட்ட வேண்டும் என்றால், தனக்கு 10 லட்சம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். இதற்கு, தேவி மறுப்புத் தெரிவிக்கவே, காந்தி தனது அடியாட்களுடன் அவரை மிரட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவத்தின் தாக்கம் தமிழக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு எல்லைபாளையம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நூல் வியாபாரி. இவர், நேற்று தனது செல்போனில் எடுத்த வீடியோ ஒன்றை தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்காணொளியில் அவர் கூறியிருப்பதாவது; லாட்டரி சீட்டால் நான் 62 லட்சம் ரூபாய் இழந்து விட்டேன். எனது தற்கொலைக்கு கருங்கல்பாளையம் 39-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில்தான் காரணம். தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சியினர் துணிச்சலாக கள்ள லாட்டரி சீட்டு விற்று வருகின்றனர். இதனால், பல அப்பாவிகளின் உயிர் பறிபோய்க் கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழகத்தில் லாட்டரியை முழுவதுமாக தடை செய்ய வேண்டும். மேலும், செந்திலிடமிருந்து 30 லட்சம் ரூபாயை நஷ்டஈடாக பெற்று எனது குடும்பத்திடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இக்காணொளி பலரையும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது.