காவல்துறை உயர் அதிகாரியின் உண்மையான சுயரூபத்தை அமைச்சர் கே.என்.நேரு உளறி கொட்டி இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க. மூத்த தலைவரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவர், நக்கல், நையாண்டிக்கு சொந்தகாரர். இவரிடம், பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு முறையாக பதில் அளிக்காமல் அவர்களையே கிண்டல் செய்வதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டவர். இதுதவிர, தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யை ஒருமையில் அழைத்து கூட்டணி கட்சியில் அணுகுண்டை வீசியவர். இப்படியாக, இவரது பேச்சும் செயல்பாடுகளும் இருந்து வருகின்றன.
இதனை தொடர்ந்து, சென்னை மேயர் பிரியாவை, நீயே சொல்லுமா? எம்மா இப்படி நீ நிற்பியாம் என பத்திரிகையாளர் முன்பே மேயரை ஒருமையில் அழைத்த காணொளி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூறியதாவது;
இங்கே வந்து இருப்பவர் இன்று டி.எஸ்.பியாக உயர்ந்து இருக்கிறார். ஒரு காலத்தில், எஸ்.ஐ.,யாக இருந்த போது எனக்கு செக்யூரிட்டியாக இருந்தவர். அவருக்கு, இருக்கும் திறமை என்னவென்றால், என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய ஆற்றல் பெற்றவர். ஒருவரை குற்றவாளியாக மாற்றவும் முடியும். குற்றவாளியை அதில் இருந்து காப்பாற்றவும் முடியும். இதற்கு, மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. அவர் எங்களோடு வளர்ந்தவர் என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, இருட்டு, என மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், குற்றவாளியை காப்பாற்ற கூடிய ஆற்றல் பெற்றவர் நமது டி.எஸ்.பி என அமைச்சர் காவல்துறை உயர் அதிகாரியை பாராட்டுகிறார் என்றால் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.