சிமென்ட் நிறுவனத்திடம் மாமூல் கேட்டு தி.மு.க. நகர செயலாளர் குடிபோதையில் ரகளை: வீடியோ  வைரல்!

சிமென்ட் நிறுவனத்திடம் மாமூல் கேட்டு தி.மு.க. நகர செயலாளர் குடிபோதையில் ரகளை: வீடியோ வைரல்!

Share it if you like it

டால்மியா சிமென்ட் நிறுவனத்திடம் மாமூல் கேட்டு, கல்லக்குடி தி.மு.க. நகரச் செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான பால்துரை குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடியில் டால்மியா சிமென்ட் பாரத் லிமிடெட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை நிர்வாகத்திடம் தனக்கு மாமூல் தர வேண்டும் என்று கல்லக்குடி நகர தி.மு.க. செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான பால்துரை கேட்டிருக்கிறார். மேலும், மேற்படி ஆலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆலை நிர்வாகம் மாமூல் தர மறுத்து விட்ட நிலையில், தான் சொல்லும் ஆட்களுக்கு வேலை வழங்கும்படி வற்புறுத்தி இருக்கிறார் பால்துரை. ஆனால், இதற்கும் ஆலை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, சம்பவத்தன்று குடிபோதையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலைக்குள் அத்துமீறி நுழைந்த பால்துரை, பாதுகாப்பு அலுவலர்களை தாக்கியும், நிறுவனத்தின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆதாரமாக வைத்து பால்துரை உள்ளிட்ட 3 பேர் மீது டால்மியா சிமென்ட் நிறுவனம் கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறது. இந்த சூழலில்தான், தி.மு.க. நகரச் செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான பால்துரை, டால்மியா சிமென்ட் ஆலையில் ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வினரின் அராஜகத்தை கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it