மதுவை ஒழிப்போம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடவில்லையே என்று கனிமொழி தெரிவித்த பதிலால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் இயங்கிவருகிறது ஒரு தனியார் கலைக் கல்லூரி. இக்கல்லூரியில் மாணவ, மாணவிகளின் திறமைகளை முன்னேற்றும் வகையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார். அவரிடம் மாணவிகள் பலவகையான கேள்விகளை எழுப்பினர். அதற்கு, கனிமொழியும் பதில் கூறினார்.
அப்போது, ஒரு மாணவி எழுந்து, “தேர்தலின்போது மதுவை ஒழிப்போம் என்று கூறினீர்கள். ஆகவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. குறிப்பாக, போலீஸ்காரர்களே மதுப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, மது விற்பனை நிறுத்தப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, “தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு பற்றி எதுவும் கூறவில்லையே. அதேசமயம், மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்படும்” என்று கனிமொழி தெரிவித்தார்.
தொடர்ந்து கேள்வி எழுப்பிய மாணவி, “போலீஸார் மதுக்கடைகளில் இருந்து பறிமுதல் செய்து கொண்டு வரும் மது பாட்டில்களை தாங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு, மதுக் கடைகளில் போலீஸாருக்கு மது விற்பனை செய்யக்கூடாது” என்று கூறினார். இதற்கு பதிலளித்த கனிமொழி, “மதுக்கடைகளில் தொழில் ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவது இல்லை. வயது பார்த்து மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, போலீஸாருக்கென்று தனியாக தரம்பிரித்து மது வழங்காமல் இருக்க முடியாது. அதேசமயம், பணியில் இருக்கும் போலீஸார் மது அருந்தி இருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்” என்று மழுப்பலாக பதில் கூறினார்.
இதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தொடர் மின்வெட்டு மற்றும் மது ஒழிப்பு குறித்து நிருபரக்ள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியவே, பதில் அளிக்காமல் எழுந்து சென்று விட்டார் கனிமொழி. அதாவது, 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு மட்டுமல்ல, தி.மு.க.வினர் நடத்திவரும் மது ஆலைகளையும் மூடுவோம் என்று சொன்னவர்தான் கனிமொழி. அதேபோல, தற்போது முதல்வராக இருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்று தெரிவித்தவர்தான். நிலைமை இப்படி இருக்க, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் மதுவை ஒழிப்போம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று கனிமொழி கூறியிருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல இருக்கிறது என்று விமர்சனம் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.