நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த தி.மு.க. பெண் கவுன்சிலர், குடும்படுத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பொம்மை தெருவைச் சேர்ந்தவர் அருண்லால். இவர், ராசிபுரம் கடைவீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி தேவிபிரியா, ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். இத்தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ரித்திகா பெங்களுருவில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இளையமகள் மோனிஷா 12-ம் வகுப்பு படித்து வந்தார். அருண்லாலின் தாயார் சுசிலா, முன்னாள் கவுன்சிலராவார். இவர்களுக்குச் சொந்தமான வீட்டின் கீழ் தளத்தில் சுசிலா வசித்து வருகிறார். மேல் தளத்தில் அருண்லால் தனது மனைவி தேவிபிரியா, மகள் மோனிஷாவுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று சுசிலா வெளியே சென்றிருந்தார். அருண்லால், தேவிபிரியா, மோனிஷா ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில், இன்று காலை வெகுநேரமாகியும் அருண்லால் வீட்டிலிருந்து யாருமே வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர், சுசீலா வசிக்கும் கீழ் தளத்துக்குச் சென்று பார்த்திருக்கிறார். வீட்டின் கதவு லேசாக திறந்திருந்ததால், உள்ளே சென்று பார்த்திருக்கிறார். சுசிலா இல்லாததால் மேல் தளத்துக்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது, அங்கு அருண்லால், தேவிபிரியா ஆகியோர் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகிலேயே அவரது மகள் மோனிஷாவும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.
உடனே, இதுபற்றி ராசிபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, அருண்லால், தேவிபிரியா, மோனிஷா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தி.மு.க. கவுன்சிலர் எதற்காக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. போலீஸார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு கடன் பிரச்னையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.