குஷ்பு, நமீதாவை தரக்குறைவாக விமர்சித்த தி.மு.க. பேச்சாளர்!

குஷ்பு, நமீதாவை தரக்குறைவாக விமர்சித்த தி.மு.க. பேச்சாளர்!

Share it if you like it

சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர், குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்த சம்பவம், பா.ஜ.க.வினர் மட்டுமல்லாது திரையுலகினர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க.வினரை பொறுத்தவரை, சமூகநீதியாகட்டும், சுயமரியாதையாகட்டும் வெறும் பேச்சோடு சரி. இதை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்திருப்போம். அதேபோல, பெண்களுக்கு சம உரிமை, பெண் விடுதலைப் போராளிகள் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால், நடப்பதெல்லாம் நேரெதிராகத்தான் இருக்கும். தி.மு.க.வினர் பெண்களை எவ்வளவு கேவலமாக நடத்தினார்கள் என்பது தொடர்பாக ஏராளமான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தி.மு.க. நிர்வாகி ஒருவர் பெரம்பலூரில் பியூட்டி பார்லரில் புகுந்து பெண்களை வயிற்றிலேயே எட்டி எட்டி உதைத்த காட்சி இன்றும் பசுமரத்தாணிபோல நினைவில் நிழலாடுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாகப் பேசி தங்களது பெண் உரிமையை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார் தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் ஒருவர்.

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர், நடிகைகளும், பா.ஜ.க. நிர்வாகிகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரின் பெயர்களை சொல்லி, நாலுமே ஐடங்கள் என்று அவதூறாகப் பேசியதோடு, குஷ்புவை தி.மு.க. நிர்வாகி ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமாக பேசினார். இப்பேச்சுதான் பா.ஜ.க. நிர்வாகிகள் மட்டுமல்லாது, நடிகர் மற்றும் நடிகைகள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவெளியில், பிரபலமான நடிகைகளை அவதூறாகப் பேசிய தி.மு.க. பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில், சமூக வலைத்தளம் ஒன்றில், சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை, ஒரு இளைஞர் ஐட்டம் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது கோர்ட். ஆகவே, தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது போலீஸாரும், கோர்ட்டும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, சரியான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதேசமயம், இக்கணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், சமூக நீதி, சுயமரியாதை பற்றி வாய்கிழியப் பேசும் தி.மு.க.வினர் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதான் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.


Share it if you like it