அமைச்சரிடம் கொந்தளித்த தி.மு.க. பெண் நிர்வாகி!

அமைச்சரிடம் கொந்தளித்த தி.மு.க. பெண் நிர்வாகி!

Share it if you like it

உங்கள் மனைவிக்கு பதவி கிடைக்க எனது வாய்ப்பை தடுப்பதா என்று தி.மு.க. பெண் நிர்வாகி ஒருவர் அமைச்சர் முன்னிலையில் கொந்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் தங்களது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு சீட் ஒதுக்குவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, அடிமட்ட நிர்வாகிகள், தொண்டர்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை. தமிழகம் முழுவதுமே இதே நிலைதான் நீடித்தது. இதற்கு தற்போதிருக்கும் கவுன்சிலர்களே சாட்சி. இதேபோல, கோயமுத்தூரிலும் நிகழ, செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் கொந்தளித்து விட்டார் தி.மு.க. பெண் நிர்வாகி ஒருவர்.

கோவை மாவட்ட மகளிரணி துணைச் செயலாளராக இருப்பவர் மீனா ஜெயக்குமார். இவர், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் கேட்டிருக்கிறார். ஆனால், கடைசிவரை சீட் கொடுக்கவே இல்லை. இதனால், மிகவும் வருத்தம் மற்றும் ஆத்திரத்தில் இருந்தார் மீனா. இந்த சூழலில், கோவை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க.வினருடனான கூடடம் கோவை காளப்பட்டியில் நடந்தது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மேயர் வேட்பாளரான விருப்ப மனு பெறப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசுவதற்காக மேடையேறினார் மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார். ஆரம்பத்திலேயே ஆவேசமாக பேச்சைத் தொடங்கிய மீனா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் விளாசு விளாசு என்று விளாசி விட்டார். “உன்னோட பொண்டாட்டிக்கு சீட் வேணுமுன்னா, நீ தாராளமா கேட்டு வாங்கிக்கோ. அதை விட்டுட்டு எனது வாய்ப்பை தடுப்பது நியாயமா?” என்று பொங்கி விட்டார். இவரது பேச்சுக்கு பலரும் ஆதரவு கொடுத்து கரகோஷங்களை எழுப்பினார்கள். அதேசமயம், தங்களது குடும்பத்தினருக்கு சீட் வாங்கியவர்கள் எதிர்ப்புக் காட்டவும் செய்தார்கள்.

இதையடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பலரும், மீனா ஜெயக்குமாரை அமைதிப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவர் விடுவதாக இல்லை. பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி தலையிட்டு, பொது இடங்களில் கட்சியை பற்றி பகிரங்கமாக குற்றம்சாட்ட வேண்டாம். எதுவாக இருந்தாலும் மனுவாக எழுதிக் கொடுங்கள் என்று கூறி, பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார். நிர்வாகிகள் கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர், தி.மு.க.வினரின் குட்டை ஓப்பனாக போட்டு உடைத்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it