பணம் வாங்கிக் கொண்டு வேலை போட்டுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய வழக்கில் செந்தில்பாலாஜி லட்டு மாதிரி மாட்டிருக்காரு என்று மூத்த பத்திரிகையாளர் மணி வெளிப்படையாக கூறியிருப்பது தி.மு.க.வினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அந்த காலகட்டத்தில், போக்குவரத்துத்துறையில் டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பணம் வாங்கிக் கொண்டு வேலை தருவதாகக் கூறி, வேலை தராமல் மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் உதவியாளர்கள் இருவர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். பிறகு, நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டவரை, 28-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூம் எடுத்திருக்கும் நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்று மூத்த பத்திரிகையாளர் மணியிடம் பேட்டி கண்டது. அப்போது, செந்தில்பாலாஜி விவகாரம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மணி, “செந்தில்பாலாஜி விவகாரத்தில் அரசியல் ஒருபுறம் இருந்தாலும், அவர் நல்லவரா என்பதுதான் கேள்வி. கோடிகோடியாக கொள்ளையடித்து தப்பித்துக் கொள்பவர்கள் ஒருபுறம். அதேசமயம், வெறும் 10 ரூபாய் லஞ்சம் வாங்கி வேலையை இழந்தவர்களை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், செந்தில்பாலாஜி ஏராளமானோரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணத்தை வாங்கிக் கொண்டு, வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியது எவ்வளவு பெரிய மோசடி. இந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜி லட்டு மாதிரி மாட்டிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
மூத்த பத்திரிகையாளரான மணி இவ்வாறு கூறியிருப்பது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையிலேயே செந்தில்பாலாஜி வசமாக சிக்கிக் கொண்டாரோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.