மொய் விருந்து மூலம் ரூ.10 கோடி வசூல்: கருப்புப் பணத்தை வெள்ளையாக்கினாரா தி.மு.க. எம்.எல்.ஏ.?

மொய் விருந்து மூலம் ரூ.10 கோடி வசூல்: கருப்புப் பணத்தை வெள்ளையாக்கினாரா தி.மு.க. எம்.எல்.ஏ.?

Share it if you like it

தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், மொய் விருந்து மூலம் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக, இந்த மொய் விருந்து வைக்கப்பட்டதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

பொதுவாகவே, மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்களில் மொய் விருந்து வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. வீடு கட்டுவதற்கோ, தொழில் தொடங்குவதற்கோ, நிலம் வாங்குவதற்கோ பணம் தேவைப்படும் பட்சத்தில், வெளியில் வட்டிக்கு கடன் வாங்குவதற்கு பதிலாக, இதுபோன்ற மொய் விருந்துகளை நடத்துகிறார்கள். இந்த மொய் விருந்துக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பதுபோல பத்திரிகை அடித்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகம் செய்வது வழக்கம். இந்த மொய் விருந்தில் முழுக்க முழுக்க அசைவம்தான் பரிமாறப்படும். இதற்காக 50-க்கும் மேற்பட்ட ஆட்டுகிடாக்களை வெட்டி, கறிக்குழம்பு, கறி வருவல், தலைக்கறி, ஈரல் மற்றும் நுரையீரல் கூட்டு, குடல் வருவல் என விதவிதமாக அசைவ உணவு வகைகள் தூள் பறக்கும்.

அந்த வகையில், தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், மொய் விருந்து வைத்து நடத்தி இருக்கிறார். ஆனால், இந்த மொய் விருந்தின் மூலம் 10 கோடி ரூபாய் வசூலானது கூறப்படுவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த அசோக்குமார். இவர்தான், நேற்று காதணி மொய்விருந்து என்கிற பெயரில் மொய்விருந்து விழாவை நடத்தி இருக்கிறார். பேராவூரணி ஸ்டேட் பேங்க் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்தான் இந்த காதணி விழா மொய் விருந்து நடந்திருக்கிறது. இதற்காக, 100 ஆட்டுக்கிடாக்களை வெட்டி, 1,300 கிலோ கறியில் விதவிதமான வெரைட்டிகளுடன் 10,000 பேருக்கு அசைவ விருந்து வைத்திருக்கிறார். இந்த மொய் விருந்து விழாவில்தான் 10 கோடி ரூபாய் மொய் வசூலாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மொய் விருந்து வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச தொகை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

மொய் விருந்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 2 முதல் 3 கோடி ரூபாய்வரைதான் வசூலாகும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே அசோக்குமார் மொய் விருந்து வைத்தபோது, இந்தத் தொகைகூட வசூலாகவில்லை என்கிறார்கள். ஆனால், இந்த முறை 10 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுதான் பல்வேறு தரப்பினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஆளும்கட்சி நிர்வாகிகள் முதல் கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரை அனைத்து தரப்பினர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்த சூழலில், தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் மொய் விருந்து மூலம் 10 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகக் கூறுவது, கருப்புப் பணத்தை வெள்ளையாக்க நடந்த முயற்சியா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

மொய் விருந்து விழா

Share it if you like it