திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இலஞ்சம் – ஊழல் குற்றச்சாட்டு – அதிகார துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டுகளை சகஜமாக எதிர் கொள்ளும். . காரணம் தன் கட்சி காரர்களின் அடாவடி – அராஜகம் – கட்டப் பஞ்சாயத்து வசூல் தான் கட்சியின் பெரும் பொருளாதார பலம் என்பதை அவர்கள் நன்கறிவார்கள். அதனால் வேறுவழி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர் மீது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை எடுத்து விட்டு எதிர் கட்சிகள் பொய் பிரச்சாரம் என்று அமைதியாக கடந்து போகும். எந்த காலத்திலும் கட்சியை கட்சி காரர்களை திமுக எப்போதும் விட்டு கொடுத்ததேயில்லை. அதுதான் தொண்டர்கள் அனைவரும் கருணாநிதி மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள காரணமாக இருக்கும்.
வழக்கமாக கட்சி தலைமையின் இந்த நம்பிக்கையை மூலதனமாக்கி கட்சி காரர்கள் தான் செய்ய கூடாததை எல்லாம் செய்து ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள். ஆனால் இம்முறை திராவிட மாடலுக்கு அவர்கள் தோழர்கள் ஓசையின்றி உடனிருந்து குழி பறித்து வருகிறார்கள். ஆம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பு வெளியானது முதல் முறுகலானவர்கள் . ஆதாயம் கருதி அப்போது மௌனம் காத்தவர்கள் இன்று காரியம் முடிந்து கை நழுவி வருகிறார்கள்.விளைவு எந்த இலவச பேருந்து பயண வாக்குறுதி சாமானிய பெண்கள் திமுகவிற்கு வாக்களிக்க காரணமாக இருந்ததோ? அதே இலவச பேருந்து பயணம் காரணமாக இன்று ஒட்டுமொத்த சமூகமும் ஆளும் அரசுக்கு எதிராக கடும் கொந்தளிப்போடு இருக்கிறது. காரணம் பெண்களை திமுகவுக்கு வாக்களிக்க காரணமான இலவச பேருந்து பயணம் இன்று அந்தப் பெண்களின் தன்மானம் சுயமரியாதையை தினமும் ஏலத்தில் விடுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படும் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் நகரப் பேருந்துகளில் அதுவும் வெள்ளை அட்டை கொண்ட பேருந்துகளில் மட்டும்தான் என்று ஆரம்பத்திலேயே ஆளும் கட்சி ஒரு ஏமாற்றத்தை கொடுத்தாலும் சரி ஏதோ கிடைத்த வரை லாபம் தான் என்று வாக்களித்த பெண்கள் கடந்து போனார்கள். ஆனால் ஏற்கனவே பல வருடங்களாக தொடர் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறையை மேலும் நஷ்டப்படுத்தும் இந்த இலவச பேருந்து பயண அறிவிப்பை ஆரம்பம் முதலே ரசிக்காத போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக இதைப் பற்றி பேச முடியாத தங்களின் இயலாமையை நிர்வாகத்திடம் எதிர் கேள்வி கேட்க முடியாத தங்களின் பணிச்சுமை – மன அழுத்தம் என்று அத்தனையும் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்களிடம் காட்டத் தொடங்கினார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 10 பேருந்துகள் இருந்த இடத்தில் இன்று 4 பேருந்துகள் கூட இல்லை என்ற அளவில் தான் போக்குவரத்து துறை இயங்கி வருகிறது . இதில் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு உண்டான பண பலன்கள் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என்ற நிலையில் இருக்கும் முன்னாள் தொழிலாளர்கள் நிலையை பார்க்கும் போது நாளை நம் நிலையும் இதுதானா? என்ற அச்சத்தில் இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களை இந்த இலவச பேருந்து பயணம் பெரும் ஆத்திரத்தில் கொண்டு நிறுத்திவிட்டது.
நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்தின் தேவை பெட்ரோல் – டீசல் விலை உயர்வு காரணமாக பொது போக்குவரத்தை நாடிவரும் கூடுதலான மக்கள் எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களால் கிராமம் தொடங்கி மாநகரம் வரை பொது போக்குவரத்தின் தேவை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த தேவைக்கேற்ப பொது போக்குவரத்து பேருந்து எண்ணிக்கை ஏற்கனவே இல்லாத நிலையில் அலுவலக நேரங்களில் நிரம்பி வழியும் பேருந்துகள் பள்ளி மாணவர்களுக்கான இலவச பயணச்சலுகை காரணமாக அரசு பேருந்துகளை மட்டுமே நம்பிக்கை பயணிக்கும் மாணவர்கள் என்று எப்போதும் அரசு பேருந்துகள் கூட்டம் நிரம்பி பிரயாணிகள் பெரும் சிரமத்தோடு பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
பள்ளி மாணவர்கள் மாணவர்களுக்கான இலவச பிரயாண சலுகை என்ற அளவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போதே அவர்கள் பேருந்து ஓட்டுநர் – நடத்துனர்- பயணச்சீட்டு பரிசோதகர்கள் என்று ஒட்டுமொத்த போக்குவரத்து துறை ஊழியர்களாலும் பிச்சைக்காரர்களைப் போல நடத்தப்படுவதும் ஏற வேண்டிய இடங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் என்று எதிலும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர்கள் அலைக்கழிக்கப்படுவதும் தினமும் அரங்கேறி வந்தது. அபூர்வமாக ஒன்றிரண்டு போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள் மாணவர்களை அன்போடு பாதுகாப்போடு அழைத்துச் செல்வது இருந்தாலும் பெரும்பாலான ஊழியர்கள் பள்ளி மாணவர்களை இன்றளவும் படுத்தும்பாடு கொஞ்ச நெஞ்சம் அல்ல.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த கசப்பான உண்மையை உணர்ந்தும் மாநில அரசு அடுத்த கட்டமாக பெண்களுக்கு மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை கொடுப்பதற்கு முன் ஒன்று போக்குவரத்து துறையின் முழு ஒத்துழைப்பை வாக்குறுதியை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் சார்பான நீண்ட கால கோரிக்கைகள் கிடப்பில் இருக்கும் பணப்பலன்கள் என்று அனைத்தையும் அவர்களுக்கு முதலில் சரி செய்திருக்க வேண்டும். இதை எதையுமே செய்யாமல் தங்களின் ஆட்சி அதிகாரம் மட்டுமே குறியாக வைத்து இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதியை அள்ளி இறைத்து அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். ஆனால் அதனால் நேரடி பாதிப்பை அனுபவிப்பது அவர்களால் தினமும் அல்லலுறுவது இலவச பேருந்து பயணம் கிடைக்கும் என்று திமுகவிற்கு வாக்களித்த பெண்கள் மட்டுமல்ல. இலவசம் – மான்யம் எல்லாம் அரசுக்கு கூடுதல் சுமை . நமக்கு தன்மான இழுக்கு என்று பொறுப்புணர்வு கொண்ட பெண்களும் தான்.
இலவச பேருந்து பயணம் என்ற ஒன்று இல்லாத கடந்த காலங்களில் அரசு பேருந்தில் பயணிக்கும் யாரும் போகும் ஊரின் பெயர் சரியாக தெரியாவிட்டால் கூட நடத்துனர் மூலமாக அதை தெளிவு படுத்திக் கொள்ள முடியும். போக வேண்டிய ஊர் – இறங்க வேண்டிய வழித்தடம் – அங்கிருந்து பயணிக்க வேண்டிய விவரம் பற்றிய அனைத்து விபரங்களையும் பேருந்தில் பயணிக்கும் ஓட்டுநர் – நடத்துனர் மூலமாக மரியாதையுடன் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்று இறங்க வேண்டிய நிறுத்தத்தில் கூட இறங்கும் அவகாசமும் பேருந்தில் ஏறும் பெண்களுக்கு பாதுகாப்பாக ஏறும் கால அவகாசம் கூட இல்லாத அவலம் தான் நீடிக்கிறது. பயண சீட்டு விநியோகம் தொடங்கி வழித்தட விவரங்கள் கேட்பது வரை அனைத்திலும் பெண்கள் மீதான அலட்சியம் அநாகரிகமான வசவுகள் தினமும் தொடர்கிறது. இருக்கைகளில் ஆண் – பெண் இருக்கை என்ற அடையாளம் கடந்து வருவது ஓசியில் தானே ?இதில் உட்கார இடமும் வேண்டுமா ? ஏன் நின்று கொண்டு போக முடியாதா? என்ற கேவலத்தையும் பெண்கள் ஏற்க வேண்டி இருக்கிறது.
முன்பெல்லாம் போதை ஆசாமிகள் பெண்களிடம் பேருந்துகளில் அத்துமீறும் போது அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழும். பேருந்தில் இருக்கும் அனைவரும் அதை தட்டிக் கேட்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஓட்டுனர் – நடத்துனர்கள் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல வேடிக்கை பார்ப்பதும், போதை ஆசாமிகள் ஓசியில் வந்தால் இப்படித்தான் இருக்கும் அவ்வளவு ரோஷம் இருந்தால் காசு கொடுத்துப் போக வேண்டியது தானே ? என்ற வார்த்தைகளை சாதாரணமாக உதிர்ப்பதும் பேருந்தில் இருக்கும் அத்தனை ஆண்களும் அதை ஆமோதிப்பது போல் மௌனம் காப்பதும் தினமும் பேருந்தில் பயணிக்கும் பெண்களை சில நூறு ரூபாய்களை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக பல பெண்கள் வாக்களித்ததன் பலனாக இன்று தங்கள் தன்மானம் சுயமரியாதை தினமும் அச்சுறுத்தப்படுவதை எண்ணி ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மாதாந்திர பயண சலுகை என்ற கட்டண சலுகையோடு பயணிப்பவர்கள் தொடங்கி சொகுசு பேருந்துகளில் பயணிப்பவர்கள் வரை அனைவருமே வெள்ளை அட்டை பொருத்திய பேருந்துக்கு காத்திருந்து இலவசமாக பயணம் செய்யும் பெண்களை ஏதோ பிச்சைக்காரர்களைப் போல பார்ப்பதும் நடத்துவதும் தினசரி நிகழ்வாகி வருகிறது. சாதாரண விஷயங்கள் தொடங்கி யதார்த்தம் நடைமுறைகள் வரை ஏன் இப்படி ? என்று யாரேனும் ஒரு பெண் நடத்துனரிடமும் ஓட்டுநரிடமும் ஒரு கேள்வி கேட்டு விட்டால் போதும் அடுத்து பேருந்து ஓட்டுனர் தொடங்கி பேருந்தில் பயணிக்கும் ஆண்கள் வரையில் அந்தப் பெண்ணை பற்றி அவர் கேட்ட கேள்வியை தவிர்த்து சம்பந்தபடாத விஷயங்களை எல்லாம் முன்வைத்து பேசுவதும் கடைசியில் இலவச பேருந்து பயணத்திற்கு ஆசைப்பட்டு தானே ஓட்டு போட்டீங்க இப்போ அனுபவிங்க. என்ற ரீதியில் அவமதிப்பதும் தொடர்கிறது. இதனால் வெள்ளை அட்டை பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் வழித்தடங்களில் பிரயாணம் செய்யும் பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தினந்தோறும் அரங்கேறும் இந்த அவலங்கள் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் ஒரே காரணத்திற்காக இதையெல்லாம் கட்டாயமாக எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் பெண்களும் இந்த இலவச பேருந்து பயணம் நாம் வேண்டி கேட்ட விஷயம் இல்லை . இதற்காக எந்த பெண்களும் போராடவோ மனு கொடுத்து வேண்டுகோள் வைக்கவோ இல்லை. ஒரு கட்சி தனது ஆட்சி அதிகாரத்திற்காக தாமாக முன்வந்து கொடுத்த ஒரு வாக்குறுதி இன்று நம்மை இவ்வளவு தூரம் அலை கழிப்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ? தெரிந்து அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் வாக்களித்தவுடன் நமது தேவை முடிந்து விட்டது இனி நம்மைப் பற்றி கவலை இல்லை என்பதாக தானே அர்த்தம் ? என்று மனம் புழுங்குகிறார்கள். இந்த இலவச பேருந்து பயணம் ஒரு பக்கம் பேருந்து களில் பெண்களின் சுயமரியாதையை சீண்டி பார்க்கும். மறுபக்கம் போக்குவரத்து துறையை சீரழிக்கும் என்ற புரிதல் உள்ள அறிவார்ந்த பெண்கள் இலவச பேருந்து பயணம் தங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு தங்களின் சுய கௌரவம் பாதிப்பதாகவே உணர்கிறார்கள்.
எதிர்வரும் காலத்தில் மீண்டும் தேர்தல் அரசியலை எதிர்கொள்ளும்போது வீடு வீடாக போய் வாக்கு கேட்கும் தகுதியில் நாம் இருக்க வேண்டும். பெண்களைப் பார்த்து எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நெஞ்சம் நிமிர்த்தி வாக்கு கேட்கும் துணிச்சல் நமது கட்சிக்காரர்களுக்கும் இருக்க வேண்டும் என்று ஆளும் கட்சி இனியும் நினைக்குமானால் ஒன்று மாநில போக்குவரத்து துறை மேல்மட்ட நிர்வாகம் முதல் கடை நிலை ஊழியர் வரை இந்த இலவச பேருந்து பயணம் என்பது ஆளும் கட்சியின் மனமார்ந்த முடிவு . அதனால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு மாநில அரசு முழு பொறுப்பேற்று உங்களுக்கு துறை சார்ந்த இழப்பீடு ஏதும் இல்லாமல் அனைத்தையும் உரிய வழியில் நிவர்த்தி செய்யும் என்று தெளிவான ஒரு வாக்குறுதியை அவர்களுக்கு வழங்க வேண்டும். அது வெறும் வாக்குறுதியாக இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இலவச பேருந்து பயணத்தை இனியும் தொடர்வது சாத்தியம் இல்லை என்ற ஒற்றை அறிவிப்பின் மூலம் அந்த இலவச பேருந்து பயண திட்டத்தை முடித்து வைக்க வேண்டும்.
இரண்டும் செய்யாமல் இனியும் மௌனமாக ஆட்சியாளர்கள் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பார்கள் ஆனால் ஒரு பக்கம் இலவச பேருந்து பயணம் என்று வாக்குறுதியை அள்ளி தெளித்து ஆட்சிக்கு வருவதும் மறுபுறம் தங்களது தோழர்களின் மூலம் அந்த இலவச பேருந்து பயணத்தை அனுபவிக்க கூடாது என்ற எண்ணம் வரும்படியான மனநிலைக்கு தமிழகத்துப் பெண்களை கொண்டு போக வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதான கருத்தியலைத்தான் பெண்கள் மத்தியில் உருவாக்கும் . அந்தக் கருத்தியல் இப்போதைக்கு எதிர் விளைவுகளை கொடுக்காது என்றாலும் இனி எந்த காலத்திலும் தேர்தல் நேரத்தில் திமுக கட்சி நிர்வாகிகள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று பெண்களிடம் கேட்கும் துணிவை வராமல் செய்துவிடும்.
உண்மையில் இந்த இலவச பேருந்து பயணம் பற்றிய எதிர்பார்ப்பு ஆர்வம் பெருவாரியாக பெண்களிடம் இல்லை. அதற்கு பதிலாக போக்குவரத்து துறையில் துறை சார்ந்த சீர் திருத்த நடவடிக்கைகள். தேவைக்கேற்ப பேருந்து சேவை. போதிய கால இடைவெளியில் சீரான பேருந்து சேவை. திருட்டு மற்றும் பாலியல் துன்புறுத்தல் இல்லாத பாதுகாப்பான பேருந்து பயணம் . குறைந்த கட்டணம் உள்ள வெள்ளை அட்டை பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிப்பு மட்டுமே கோரிக்கையாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறது ? திராவிட மாடல் அரசு.