ஆ.ராசாவுக்கு எதிராக 3 பெண் எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்!

ஆ.ராசாவுக்கு எதிராக 3 பெண் எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்!

Share it if you like it

ஹிந்துக்களை இழிவாகப் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிராக, பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 பெண் எம்.பி.க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

தி.மு.க. எம்.பி.யும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ஹிந்துக்கள் விபசாரியின் மகன்கள் என்று இழிவுபடுத்தும் வகையில் பேசினார். ராசாவின் இப்பேச்சு, ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆ.ராசாவை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பா.ஜ.க., இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், ஹிந்துக்களும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியதோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களும் அளிக்கப்பட்டன. மேலும், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இனி அவர் தேர்தலில் போட்டியிடாதவாறு தடைவிதிக்கக் கோரியும், பா.ஜ.க. தொழில் நுட்பப் பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு புகார் மனு அனுப்பினார்.

இந்த நிலையில், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் 3 பேர், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அக்கடிதத்துடன், ஆ.ராசாவின் பேச்சு தொடர்பான பத்திரிகை செய்திகள் மற்றும் வீடியோ, அதன் எழுத்து வடிவம் உள்ளிட்டவற்றையும் சமர்ப்பித்திருக்கிறார்கள். மேலும், அக்கடிதத்தில் தற்காலிக சபாநாயகராக இருக்கும் ஆ.ராசாவை அப்பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள். இதற்கு, தி.மு.க. மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஓம்பிர்லா கூறியதாகத் தெரிகிறது.


Share it if you like it