சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பார்த்தசாரதி ரெட்டி தெருவில், திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களின் பயன்பெறும் படிவங்கள் நேற்று மாலை திமுக நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டன. திமுகவை சேர்ந்த இரண்டு பெண்கள் வீடு வீடாக சென்று படிவத்தை பூர்த்தி செய்யும் பணியினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மனித நேயம் மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி அஸ்லாம் என்பவரின் வீட்டில் படிவத்தை பூர்த்தி செய்யும் பணியை மேற்கொண்ட போது பெண்களிடம் ஆபாசமாக பேசி பிரச்னை செய்து படிவத்தை கிழித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திமுக 35வது வட்ட செயலாளர் ஹரிதாஸ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அஸ்லாம் வீட்டிற்கு சென்று தகராறு செய்து இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அஸ்லாமிற்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிப்பதற்காக மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தைக்கு திமுக நிர்வாகியை அழைத்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. காவல் நிலையத்திலேயே இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.