அரசு பள்ளி மாணவர்கள் மீது ஜாதி ரீதியில் தி.மு.க. நிர்வாகிகள் தாக்குதல்: வி.சிறுத்தைகள் போராட்டம்!

அரசு பள்ளி மாணவர்கள் மீது ஜாதி ரீதியில் தி.மு.க. நிர்வாகிகள் தாக்குதல்: வி.சிறுத்தைகள் போராட்டம்!

Share it if you like it

தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் தூண்டுதலின் பேரில், அரசுப் பள்ளி மாணவர்கள் மீது ஜாதி ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நெகனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே கடந்த சில நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது. இதையடுத்து, தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர், கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் பள்ளிக்குச் சென்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை மிரட்டி எச்சரித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதன் பிறகு, ஜெய்சங்கர், பிரபாகரன் தூண்டுதலின் பேரில், பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல், உதவி தலைமை ஆசிரியர் முன்னிலையிலேயே, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை தாக்கி இருக்கிறது.

இச்சம்பவத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர். இவர்கள் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வளத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மாணவர்களின் உறவினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் செஞ்சி டி.எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்தனர். இவர்களை விசாரணைக்காக நேற்று மாலை டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைத்தனனர்.

இதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் மற்றும் அம்பேத்கர் கட்சியினர், மாணவர்களின் உறவினர்கள் செஞ்சி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், ஒன்றரை மணி நேரமாகியும் வெளியே சென்றிருந்த டி.எஸ்.பி. திரும்பி வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்தவர்கள் செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it