பிப்ரவரியில் 31 தேதியாம்… திராவிட மாடல் அமைச்சர்!

பிப்ரவரியில் 31 தேதியாம்… திராவிட மாடல் அமைச்சர்!

Share it if you like it

பிப்ரவரி 31-ம் தேதிக்குள் சொத்து வரியை உயர்த்தா விட்டால், நிகழாண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தமிழகத்துக்கு வராது என்று மத்திய அரசு சொன்னதாக, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான சொத்து வரியை 25 முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி இருக்கிறது தி.மு.க. அரசு. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுவது வழக்கமாக இருக்கிறது. உதாரணமாக, தி.மு.க. ஆட்சியில் 1998-ம் ஆண்டிலும், 2008-ம் ஆண்டிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கி, தங்களது ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக, இப்படி பொதுமக்கள் வயிற்றில் அடித்து சொத்து வரியை உயர்த்துவது தி.மு.க.வின் வாடிக்கையாகி விட்டது. அதேசமயம், அ.தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி உயர்த்தப்படுவது அரிதிலும் அரிது. இதற்கு சாட்சியாக 2011 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. அரசு சொத்து வரியை உயர்த்தும்போதெல்லாம் மத்திய அரசு மீது பழியைப் போட்டுவிட்டு, தாங்கள் தப்பித்துக் கொள்வதும் வழக்கம். அப்படித்தான் இந்த முறையும் சொத்து வரியை உயர்த்தி விட்டு, மத்திய அரசின் நிர்பந்தத்தால்தான் சொத்து வரியை உயர்த்தியதாக பழியை தூக்கிப் போட்டிருக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்தான் என்பார்களே அதுபோல, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் செய்தியாளர்கள் சந்திப்பில் தி.மு.க.வின் குட்டு வெளிப்பட்டு விட்டது. ஆம், பிப்ரவரி 31-ம் தேதிக்குள் சொத்து வரியை உயர்த்தவில்லை என்றால், இந்த ஆண்டுக்கான உள்ளாட்சி அமைப்பு நிதி வராது என்று மத்திய அரசு சொல்லி விட்டதாக சொல்லி இருக்கிறார் அமைச்சர் நேரு. இதனால் வேறு வழியின்றி சொத்து வரியை உயர்த்தியதாகக் கூறியிருக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால், பிப்ரவரி மாதம் 28-ம் தேதியுடன் முடிவடைந்து விடும் என்பதுதான். லீப் வருடம் எனப்படும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் 29 தேதியாக இருக்கும்.

நிலைமை இப்படி இருக்க, பிப்ரவரி 31-ம் தேதிக்குள் என்று அமைச்சர் நேரு கூறியிருக்கிறார். ஆகவே, சொத்து வரி உயர்வை மாநில தி.மு.க. அரசே உயர்த்து விட்டு, மத்திய பா.ஜ.க. அரசு மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறது. தவிர, தமிழகத்தில் தற்போது பா.ஜ.க. அரசு வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக பா.ஜ.க. இருக்கும் என்பதுதான் நிதர்சனம். ஆகவே, இப்படி பா.ஜ.க. மீது அபாண்டமாக பழியைப் போட்டு, மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி, அக்கட்சியின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறது தி.மு.க. இதன் வெளிப்பாடுதான் சொத்து வரி விவகாரத்தில் பா.ஜ.க. மீது பழியை தூக்கிப் போட்டிருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அமைச்சர் நேருவின் அண்டப்புளுகு அப்பட்டமாக வெளிச்சத்து வந்து விட்டது. இதையடுத்து, பிப்ரவரி மாதத்தில் எத்தனை தேதிகள் என்பதுகூட தெரியாத இவரெல்லாம் ஒரு அமைச்சரா என்று நெட்டிசன்களும், பொதுமக்களும் கிண்டல், கேலி செய்யும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார் நேரு.


Share it if you like it