பெருந்தலைவர் காமராஜரையும், நாடார் சமூக சமூகப் பெண்களையும் இழிவுபடுத்தி பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாடார் சமூகத்தினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.பாரதி. எதற்கெடுத்தாலும் வாய்க்கொழுப்பாக பேசி வாங்கிக் கட்டிக் கொள்வார். அந்த வகையில், ஏற்கெனவே பல்வேறு விவகாரங்களில் வாய்த்துடுக்காக பேசி கோர்ட்டிலும், மக்கள் சபையிலும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இந்த சூழலில், தி.மு.க.வினரின் கட்டை விரலை வெட்ட வேண்டும் என்று காமராஜர் கூறினார். ஆனால், அவருக்கு கல்லறை கட்டியது தி.மு.க.தான் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினரும், நாடார் சமூகத்தினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்யவே, மன்னிப்புக் கேட்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, 200 ஆண்டுகளாக தோள் சீலை போடுவதற்கு போராடிய நாடார் சமூகப் பெண்களுக்கு ஜாக்கெட் போட அனுமதி பெற்றுத் தந்தது திராவிடம்தான் என்று கூறியிருந்தார். இப்படி தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்களை பற்றியும் இழிவாக பேசிவரும் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
ஆலந்தூர் நாடார் சங்க திருமண மண்டபத்தின் அருகில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிய நாடார் சங்கத்தினர் நங்கநல்லூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் வீட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் தலைமையிலும், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம்.சீனிவாசன் முன்னிலையிலும் நடந்த இந்த ஆர்ப்பாட்டித்தை, பா.ம.க. மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா தொடங்கி வைத்தார். ஏராளமான நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் கூறுகையில், ‘தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து நாடார் சமுதாயத்தை இழிவாக பேசி வருகிறார். நாடார் பெண்கள் மட்டுமின்றி, தமிழ் பெண்களையும் இழிவுபடுத்துகிறார். அவரை பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து போராட்டம் நடத்துவோம்’ என்றார்.