3 மாதங்களில் தீர்ப்போம் என்று கூறிய திமுக, 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு !

3 மாதங்களில் தீர்ப்போம் என்று கூறிய திமுக, 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு !

Share it if you like it

வீரகேரளம் ஹவுசிங் போர்டு பிரச்சினை மற்றும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும், கடந்த 2009 ஆம் ஆண்டு, தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், மூன்று மாதங்களில் தீர்ப்போம் என்று கூறினார். ஆனால் 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவற்றிற்கு தீர்வு கிடைக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகளான திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை, நொய்யல் நதி சீரமைப்பு, விமான நிலையம், ரயில் நிலையம், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் நிறைவேற்ற, வனவிலங்கு-மனிதர்கள் மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, நொய்யல் நதியைச் சுத்தப்படுத்த, நமது பிரதமர் திரு. மோடி அவர்கள், ரூ.970 கோடி வழங்கியுள்ளார். ஆனால், திமுக அரசு, நொய்யல் நதியைச் சுத்தம் செய்துள்ளதா? அம்ருத் 2.0 திட்டத்தை, கலைஞர் நூற்றாண்டு திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள். இதுபோன்று அரைகுறையாக அல்லாமல், நொய்யல் நதியை முழுமையாக மீட்டெடுக்க, பிரதமரின் வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாகக் கிடைக்க, புதிய திட்டங்களைக் கேட்டுப் பெற, நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும்.

1980களில் தொடங்கிய வீரகேரளம் ஹவுசிங் போர்டு பிரச்சினை மற்றும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும், கடந்த 2009 ஆம் ஆண்டு, தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், மூன்று மாதங்களில் தீர்ப்போம் என்று கூறினார். 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவற்றிற்கு தீர்வு கிடைக்கவில்லை. பாஜக சார்பில், கோயம்புத்தூரின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், திமுக அரசுடன் சண்டை போட்டாவது, இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வினைப் பெற்றுத் தருவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சாமனிய மக்களுக்கான பத்தாண்டு கால நல்லாட்சியில், கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து மீட்டிருக்கிறோம். உலகப் பொருளாதாரத்தில், 11வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். தொழில் வளர்ச்சி, விவசாயம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மேம்பாடு என, அனைத்துத் தரப்பினரும் முன்னேறும் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். நாட்டின் உட்கட்டமைப்பை பல மடங்கு மேம்படுத்தி இருக்கிறோம். வேகமாக வளரும் பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறோம். திமுகவின் கடந்த 33 மாத கால ஆட்சிக்கு, நெகடிவ் மதிப்பெண்தான் கொடுக்க முடியும். ஆனால், நமது பாரதப் பிரதமர் 10 ஆண்டு கால நல்லாட்சியில், கொடுத்த அத்தனை தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு, நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல மக்கள் மத்தியில் நேர்மையாக, தைரியமாக மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்கிறோம். கோயம்புத்தூரில் எப்போதும் மோடி அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது

வரும் பாராளுமன்றத் தேர்தல், தேசியத் தேர்தல். நாட்டின் வளர்ச்சிக்கான, நாட்டின் பாதுகாப்புக்கான தேர்தல். பெருமளவில், தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியலுக்குச் சம்பந்தமில்லாதவர்கள், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர்கள் என அனைவரும் எழுச்சியுடன் நமது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்காக களத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள தேர்தலில், கட்சி வேறுபாடின்றி, வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, அண்ணாமலையாகிய என்னை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.


Share it if you like it